Random image

விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசிய முன்னாள் பெண் அமைச்சர் மீது வழக்கு

கொழும்பு:

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தாக கூறி ராஜினாமா செய்த தமிழ் அமைச்சர் விசாரணை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இலங்கையில் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர் விஜயகலா மகேஸ்வரன். இவர் கடந்த ஜூலை மாதம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். ஜாஃப்னாவில் பேசிய அவர், ‘‘வடக்கு மாகாணத்தில் குற்ற செயல்கள் அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைநதுள்ளது. அதனால் இந்த பகுதியை சேர்ந்த மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக வேண்டும், திரும்ப வர வேண்டும்’’ என்று பேசினார்.

இவரது இந்த பேச்சுக்கு இலங்கையில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. நாடாளுமன்றத்திலும் பிரச்னை எழுப்பப்பட்டது. அமைச்சர் பதவியில் விஜயகலாவை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதை தொடர்ந்து பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவிடம் பேசிய பின்னர் விஜயகலா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

விஜயகலா கருத்து குறித்து விசாரணை நடத்த அட்டார்னி ஜெனரலுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அவர் அரசியலமைப்பு சட்டத்தை மீறி பிரிவினைவாத இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பொது இடத்தில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் மீது பொதுமக்களை அரசுக்கு எதிராக திருப்பியதாக சட்டப்பிரிவு 120ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

ராஜினாமாவுக்கு பின்னர் முதன்முறையாக அவர் பொது இடத்தில் பேசுகையில்,‘‘தமிழ் மக்கள் பிரச்னைகள் குறித்து பேசுபவர்களை விடுதலைப் புலிகளாக தெற்கு மாகாண வாசிகள் பார்க்கின்றனர். மக்கள் நலனுக்காக தான் நான் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக போராடுவேன். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்ததாக கூறி நாடாளுமன்றத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன்’’ என்றார்.