இலங்கை நாடாளுமன்றத்தில் மோதல்: சபாநாயகர் மீதும் தாக்குதல்!

--

இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் மற்றும் ராஜபக்சே ஆதரவு எம்பிக்களிடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் இடையில், சபாநாயகர் கரு ஜெயசூர்யாவும் தாக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில், நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேன பிறப்பித்த உத்தரவுக்கு வருகிற 19ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஜனவரி 5-ம் தேதி பொதுத் தேர்தல் நடத்தவும் தடை விதித்தது. இதையடுத்து இலங்கை நாடாளுமன்றம் நேற்று காலை 10 மணிக்கு கூடியது.

srilanka

அப்போது அதிபர் சிறிசேனாவால் புதிதாக பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த ராஜபக்சே ஆவேசமாக அவையிலிருந்து வெளியேறினார்.

அதன் பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக பெரும்பாலான எம்.பிக்கள் வாக்களித்தனர். இதையடுத்து ராஜபக்சே அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றும், ராஜபக்ச அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிரூபிக்கப்பட்டது என்றும் சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார்.

இதனிடையே தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த ராஜபக்சே உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. இதையடுத்து, அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்த சபாநாயகர் இன்று காலை மீண்டும் அவை கூடும் என்று அறிவித்தார்.

இந்நிலையில், இன்று காலை மீண்டும் அவை கூடியது. அப்போது பேசிய ராஜபக்சே, ” இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் நேற்றைய தினத்தைப் போன்று எனது வாழ்நாளில் நான் இதுவரை பார்த்ததில்லை. ஒரு அதிபராக இருந்த எனக்கு ஒன்றும் பிரதமர் பதவி முக்கியமானதல்ல. மேலும், நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும்” என்று அவர் தனது கோரிக்கையை முன்வைத்தார்.

இதற்கு ரணில் ஆதரவு எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவிக்க, ராஜபக்சே மற்றும் ரணில் ஆதரவு எம்பிக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் இடையில், சபாநாயகர் கரு ஜெயசூர்யாவும் தாக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, சபாநாயகர் கரு ஜெயசூர்யா அவையிலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.