டில்லி:

பிரபல நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதன் காரணமாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடும்படி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.

பிரபல நடிகையான ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில்  கலந்து கொள்வதற்காக சென்றிருந்தபோது எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார். ஆரம்பத்தில்,  மாரடைப்புக் காரணமாக ஸ்ரீதேவி உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியானது. பின்னர் அவர் அருந்தியிருந்த மது காரணமாக  குளியல் தொட்டியில் மயங்கி விழுந்து இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவரது உடல் இந்தியா எடுத்து வருவதில் சிக்கல் உருவானது.   ஸ்ரீதேவி மரணத்தில், பல சந்தேகங்கள் இருப்பதாக, துபாய் அரசு வழக்கறிஞர் கூறியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஸ்ரீதேவியின் மரணம் குறித்து, பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

ஸ்ரீதேவியின்  கணவர் போனி கபூர் மற்றும் அவரது  உறவினர்களிடமும், துபாய் போலீசார் விசாரணை நடத்தியதை தொடர்ந்து வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று, சுனில்சிங் என்ற பாலிவுட்  திரைப்பட இயக்குநர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, சுனில்சிங் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், ஸ்ரீதேவி 240 மில்லியன் ரூபாய் அளவிலான இன்சூரன்சு பாலி எடுத்துள்ளார். இதன் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பினார்.

ஆனால், உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா,  துபாய் போலீசார் நடத்திய விசாரணையில் சந்தேகப்படும் அம்சங்கள் எதுவும் இல்லை என கூறனிர். அதைத்தொடர்ந்து  மனுவை தள்ளுபடி செய்வதாக உச்சநீதி மன்றம் கூறி உள்ளது.

ஏற்கனவே, இதுகுறித்து சுனில்சிங் டில்லியில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.