கடைசிவரை நிறைவேறாத  ஸ்ரீதேவியின் ஆசை!

நேற்று முன்தினம் நடிகை ஸ்ரீதேவி துபாயில் மரணமடைந்தார். அவரது உடல் மும்பைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இவரது மரணம் திரையுலகை மட்டுமின்றி ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரீதேவி. தான் நடித்த மொழிகளில் எல்லாம் நம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்தார். அழகுக்காக மட்டுமின்றி சிறந்த நடிப்பிற்காகவும் அழர் கொண்டாடப்பட்டார்.

அதற்கேற்ப பல்வேறு விருதுகளையும் பெற்றார்.  மீண்டும் கோகிலா என்ற படத்தில் நடித்ததற்காக ஃபிலிம்பேர் விருது (தெற்கு) வழங்கப்பட்டது.

சால்பாஸ் மற்றும் லம்ஹே படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றிருந்தார். நாகின், சாந்தின், குதா கவா படங்களுக்கு சிறப்பு விருதுகள் பெற்றார்.

ஷண ஷணம் என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.

ஆந்திராவின் சிறந்த நடிகைக்கான நந்தி விருதும் அவருக்கு கிடைத்தது.

இந்தி சினிமாவில் சிறந்த பங்களிப்புக்காக மாமி (MAMI) விருது அளிக்கப்பட்டது.   2013-ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியும் கவுரவித்தது.

இப்படி  நூற்றுக்கும் அதிகமான விருதுகளை பெற்றிருந்தாலும், அவருக்கு ஒரு குறை இருந்தது. அதாவது நடிப்புக்காக தேசிய விருது பெறவில்லையே என்பதுதான் அது.

தமிழில் மூன்றாம் பிறை படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று பேசப்பட்டது. ஆனால் அப்படத்தில் நடித்த கமல்ஹாசனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

இது குறித்து அப்போது கமல்ஹாசன் கூறியது முக்கியமானது.

“ஒரே படத்தில் நடித்திருந்தாலும் விருதுக்கான போட்டி, எனக்கும் ஸ்ரீதேவிக்கும் அல்ல.  நடிப்புக்கான தேசிய விருது ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்குத் தனியாகவும் அளிக்கப்படுகிறது. ஒரே படத்தில் நடித்திருந்தாலும் ஆண், பெண் இருவருக்கும்கூட விருதுகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. இந்த வருடம் விருது பெற்ற நடிகையுடன்தான் ஸ்ரீதேவிக்கு போட்டி” என்று கமல் விளக்கம் அளி்த்தார்.

ஆனாலும் எத்தனையோ படங்களில் சிறப்பாக நடித்திருந்தாலும், ஸ்ரீதேவியின் தேசிய விருது ஆசை நிறைவேறவே இல்லை.