ஸ்ரீஹரிகோட்டா: இந்திய ராக்கெட் ஏவுதளத்திற்கான முக்கிய கேந்திரமாக இருக்கும் ஸ்ரீஹரிகோட்டா தீவு, கடல் அரிப்புக்கு உள்ளாகி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னைப் பகுதிகளில் நடைபெறும் அதிகபட்சமான துறைமுக உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆய்வும் நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக தொடர்புடைய வட்டாரங்கள் கூறுவதாவது; ஆம், நாங்கள் இத்தீவில் கடல் அரிப்பை உணர்கிறோம். குறிப்பாக, தீவின் வடக்குப் பகுதியில் அது நிகழ்கிறது. இதுதொடர்பான ஆய்வறிக்கையை வழங்கும்படி, சென்னையிலுள்ள கடலோர ஆய்வுக்கான தேசிய மையத்திடம்(என்சிசிஆர்) நாங்கள் கேட்டுள்ளோம். அந்த அறிக்கையை எதிர்பார்த்திருக்கிறோம்.

தற்போதைய நிலவரப்படி, தோராயமாக, தீவு நிலத்தில் 200 – 300 மீட்டர்கள் வரை அரிப்புக்கு உள்ளாகியுள்ளது என்று கணிக்கிறோம். கூகுள் வரைபட அடிப்படையிலேயே இதைக் கூறுகிறோம் என்றுள்ளனர்.

அப்பகுதியிலுள்ள மீனவர்களும், அத்தீவு அரிப்புக்கு உள்ளாவதாய் கூறுகின்றனர். ஸ்ரீஹரிகோட்டா தீவுக்கு அருகில் பல கிராமங்கள் உள்ளன. புலிகாட் ஏரிதான், அந்த கிராமங்களை, தீவிலிருந்து பிரிக்கிறது. அக்கிராமங்களிலிருந்து பல குழந்தைகள், படிப்பதற்காக தீவுக்கு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னையில் பெருகியுள்ள துறைமுகம் சார்ந்த உள்கட்டமைப்பு நடவடிக்கைகள்தான், இந்த கடலரிப்புக்கு காரணமாக இருக்கிறதா? என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்.