இலங்கை : கொரோனா அறிகுறிகளை மறைத்தால் 6 மாத சிறை

கொழும்பு

கொரோனா அறிகுறிகளை மறைத்தால் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கும் பரவி உள்ளது.  கோவிட் 19 என அழைக்கப்படும் இந்த தொற்றினால் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, தென்கொரியா போன்ற நாடுகளில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதைத் தவிர அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், தைவான், பிலிப்பைன்ஸ், வியட்நாம், அரபு நாடுகள் எனப் பல நாடுகளிலும் அதிக அளவில் பாதிப்பு உள்ளது.

பல உலக நாடுகள்  இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கி உள்ளன.  நமது அண்டை நாடான இலங்கையில் இதுவரை 18 பேருக்கு கோவிட் 19 பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது.    இதனால் இலங்கை அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.    இது குறித்து இலங்கை அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் “கோவிட் 19  அறிகுறிகளை மறைப்பவர்களை அரசு உத்தரவு இன்றி கைது செய்யும்.   அத்துடன் அவர்களுக்கு 6 மாத சிறை தனடனி விதிக்கப்படும்.   கொரோனா குறித்த போலி வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.   சமூக வலைத் தளங்களில் இவ்வாறு வதந்திகளைப் பரப்பிய 23 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.