கொழும்பு:

லங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகள் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்க லாம் என்றும், அவர்கள் இந்தியாவில் பயிற்சி பெற்றவர்கள் என்றும்  இலங்கை ராணுவ தளபதி தெரிவித்து இருந்த நிலையில், தமிழகம் மற்றும் கேரளாவில்  26 இஸ்லாமிய பிரசாரகர்கள் கண்காணிக்கப்படுவதாக  தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையில் கடந்த மாதம்  (ஏப்ரல் 21) ஈஸ்டர் பண்டிகையன்று கொழும்பில் தேவாலயங்கள் உள்பட 8 இடங்களில் பயங்கர குண்டுவெடிப்பு நடைபெற்றது. இதில்  பல சிறுவர்கள் உள்பட 253 பேர் கொல்லப்பட்ட நிலையில் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.‘

இந்த கொடூர செயலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.  இருந்தாலும் அந்த அமைப்புடன் தொடர்புடைய  தவ்ஹீத் ஜமாத் அமைப்பு உள்பட சில இஸ்லாமிய அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை செய்துள்ளது.

இலங்கை கொண்டுவெடிப்பை தொடர்ந்து இந்தியாவிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என செய்திகள் பரவியதை தொடர்ந்து நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டது. தமிழகம் மற்றும் கேரளாவில் அதிரடி சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

இலங்கையில் குண்டுவெடிப்பை தொடர்ந்து நடைபெற்றும் வரும் தொடர் விசாரணையில், வெளி நாடுகளில் இருந்து வந்து இஸ்லாமிய மத பிரசாரம் செய்து வந்த பல இஸ்லாமிய மத பிரசாரகர் களுக்கும் இந்த குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து, அவர்களை உடனே நாட்டை விட்டு வெளியேற இலங்கை அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை ராணுவ தளபதி  மகேஷ் சேனநாயகே,  இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடையவர்கள்  இந்தியாவுக்குள் நுழைந்திருப்ப தாகவும், பெங்களூரு, கேரளா ஜம்மு காஷ்மீர் பகுதியில் தங்கியிருக்க  வாய்ப்பு உள்ளதாக தங்களுக்கு தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறினார்.

இந்த நிலையில், இந்திய தேசிய புலனாய்வு அமைப்பான  என்ஐஏ நடத்திய  அதிரடி வேட்டையை தொடர்ந்து வருகிறது. சமீபத்தில்,  பயங்கரவாதிகளின் ஸ்லிப்பர் செல்லாக  செயல்பட்டு  தமிழ்நாட்டை சேர்ந்த ரியாஸ் அபுபக்கர் என்வர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடைபெற்ற அதிரடி விசரணையை தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் தமிழகம் மற்றும் கேரளாவில்  26 இஸ்லாமிய பிரசாரகர்கள் தங்கி இருப்பதாகவும், அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் கேரளாவில் தங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த இஸ்லாமிய பிரசாரகர்கள், இங்குள்ள இஸ்லாமியர்களிடையே ஷரியத் சட்டம் மற்றும் மத போதனைகள் செய்வதுடன், பயங்கரவாதத்தையும் வளர்த்து வருவதாகவும், இவர்களுக்கும் பயங்கரவாத அமைப்பினருக்கும் இடையே தொடர்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கூறி புலனாய்வு பிரிவு அதிகாரி,  “மதத்தின் பெயரால் வெறுப்புணர்வை தூண்டுகிற, ஜிகாத்களில் இளைஞர்களை இணைக்கத் தூண்டுகிற இஸ்லாமிய போதகர்கள் சிலரை தமிழகம் மற்றும் கேரளாவில் கண்காணித்து வருகிறோம். அவர்களின் மீது இதுவரையில் தீவிரவாதம் சார்ந்த வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை. ஆனால் இப்போது கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த 2 மாநிலங்களிலும் 25 முதல் 26 இஸ்லாமிய மத போதகர்கள் மத ரீதியான ஆத்திரமூட்டும் வகையிலான விரிவுரைகள், ஜிகாதியில் இணையத்தூண்டும் பிரசங்கங்கள், மற்ற மதங்களை சிறுமைப்படுத்துவது போன்றவற்றை செய்கிறார்கள்” என்றார். இவர்களில் சிலர் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளான அல்-கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் போன்றவற்றை ஆதரிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.. மத போதகர்கள் சார்ந்த வீடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் கடந்த சில வாரங்களாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.

இவர்களுக்கும் இலங்கை குண்டுவெடிப்புக்கும் சம்பந்தம் இருப்பதாக இலங்கை தெரிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.