சீனாவுக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்ட இலங்கை துறைமுக ஒப்பந்தம் ரத்து

கொழும்பு

சீனாவின் தனியார் நிறுவனத்துக்கு இலங்கை ஹம்பந்தோடா துறைமுகம் 99 ஆண்டுக் குத்தகைக்கு வழங்கிய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள ஹம்பந்தோடா துறைமுகத்தைக் கடந்த 2017 ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் சிறிசேனா 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்க ஒப்பந்தம் செய்தார்.   அப்போதைய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டார்.  இந்திய அரசு இந்த ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தது.   சீன அரசு இந்த துறைமுகத்தைப் போர்க்கப்பல்கள் நிறுத்தும் தளமாக மாற்றும் என்பதால் இந்தியாவுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் உண்டாகும் என இந்தியா தெரிவித்தது.

இதற்கு சீனா மறுப்பு தெரிவித்தது.  இந்த துறைமுகம் இந்தியாவுடன் ஐரோப்பா கண்டத்தை இணைக்கும் என்பதால் வர்த்தகம் மேம்படும் எனவும் இதனால் இலங்கையின் பொருளாதாரம் வலுவடையும் எனவும் சீனா விளக்கம் அளித்தது.  இலங்கை அரசு சார்பில் அந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக இந்த துறைமுகம் சீனாவுக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் அங்கு ராணுவ தளம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கோத்தபாய ராஜபக்சே இந்த ஒப்பந்தம் தாம் வெற்றி பெற்றால் ரத்து செய்யப்படும் என அறிவித்திருந்தார்.  தற்போது அதிபர் தேர்தலில் வென்று புதிய அதிபராக கோத்தபாய ராஜபக்சே பதவி ஏற்றுள்ளார்.  அதையொட்டி ஹம்பந்தோடா துறைமுக ஒப்பந்தத்தை ரத்து செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இந்த அறிவிப்பை இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் பொருளாதார ஆலோசகருமான அஜித் நிவார்ட் கபிரால் வெளியிட்டுள்ளார்.    முன்பு மகிந்த ராஜபக்சே இலங்கை அதிபராகப் பதவி வகித்த போது கோத்தபாய ராஜபக்சே ராணுவ அமைச்சராக இருந்தார்.  அந்த சமயத்தில் இலங்கை அரசு சீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு பல்வேறு திட்டப்பணிகளைச் சீனாவுக்கு வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 99 years lease, 99 வருட குத்தகை, agreement cancelled, china, Gotabaya rajapakse, hampanthoda port, India oppose, srilanka, இலங்கை, ஒப்பந்தம் ரத்து, கோத்தபாய ராஜபக்சே, சீனா, ஹம்பந்தோடா துறைமுகம்
-=-