தென்னை மரத்தில் ஏறி பேட்டி அளித்த தென்னை மேம்பாட்டுத் துறை அமைச்சர்.. 

தென்னை மரத்தில் ஏறி பேட்டி அளித்த தென்னை மேம்பாட்டுத் துறை அமைச்சர்..

விளம்பர மோகம் அரசியல்வாதிகளை எந்த எல்லைக்கும் அழைத்துச் செல்லும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இலங்கையில் நடந்துள்ள சம்பவத்தைச் சொல்லலாம்.

 இலங்கையில் தென்னை உற்பத்தி நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதனால் தென்னை மேம்பாட்டுக்கு என தனித்துறையை உருவாக்கி, அருந்திகா பெர்னாண்டோ என்பவரை அதன் அமைச்சராக நியமித்துள்ளது, இலங்கை அரசு.

கொழும்பில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தங்கோதுவா என்ற நகரம், பெர்னாண்டோவின் தொகுதிக்குள் வரும் இடமாகும்.

நேற்று முன்தினம் தனது தொகுதிக்குச் சென்ற தென்னை வளர்ச்சித் துறை அமைச்சர் பெர்னாண்டோ, தேங்காய்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை குறித்தும், தென்னை தொழில் மேம்பாட்டுக்குத் தனது இலாகா மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்தும் பேட்டி அளிக்க ஏற்பாடு செய்தார்.

பெர்னாண்டோ, தென்னை மர இலாகா அமைச்சராக இருப்பதால், அவர் தென்னை மரத்தில் ஏறி பேட்டி அளித்தால் பொருத்தமாக இருக்கும் என அவரது ஆதரவாளர்கள் கருதினர்.

அமைச்சரும் இதற்கும் சம்மதம் சொன்னார்.

உடனடியாக தென்னை மரத்தில் அமைச்சர் ஏறுவதற்கு, மரம் ஏறும் கருவி கொண்டு வரப்பட்டது.

அதன் மூலம் தென்னை மரத்தில் ஏறிய அமைச்சர் பெர்னாண்டோ,  மரத்தின் உச்சியில் நின்று கொண்டு பேட்டி அளித்தார்.

இதனை அங்குக் குழுமி இருந்த ஊடகங்கள், படம் பிடித்தன.

இந்த வீடியோ காட்சிகள்,இலங்கையில் உள்ள சமூக வலைத்தளங்களில்  இப்போது வரலாகப் பரவி வருகிறது.

-பா.பாரதி.