கொழும்பு

தற்போதைய இலங்கை அரசு பாதுகாப்பு விவகாரத்தில் கடும் தோல்வி அடைந்துள்ளதாக அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கொத்தபாயா ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 253 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது அரசின் தோல்வி என்பதை அதிபர் மைத்ரிபால சிறிசேன மற்றும் பல தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கொத்தபாயா ராஜபக்சே தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி ஊடகத்துக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். முன்னாள் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பி கொத்தபாயா என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டியின் சில முக்கிய அம்சங்கள் பின் வருமாறு :

இலங்கையில் ஏன் தாக்குதல் நடந்தது என்பதற்கும் பெரும்பான்மையான புத்தர் கோவில்கள் தாக்கப்படாமல் தேவாலயங்கள் தாக்கப்பட்டது ஏன் என்பதற்கோ சரியான காரணம் யாருக்கும் தெரியாது. தாக்குதல் நடத்தியவரகள் தங்கள் பலத்தை ஒரு புதிய நாட்டிடம் காட்ட முற்பட்டிருக்கலாம். அமெரிக்கா உள்ளிட்ட பல மேலை நாடுகள் கடந்த 2015 ஆம் வருடத்தில் இருந்து இங்கு அதிக கவனம் செலுத்துவதால் இருக்கலாம். நியுஜிலாந்து நாட்டு மசூதி தாக்குதலுக்காக கிறித்துவர்களை பழிவாங்க எண்ணி இருக்கலாம். அதனால் அவர்கள் புத்தர்களுக்கு பதில் கிறித்துவர்களை குறி வைத்து தாக்கி இருக்கலாம்.

இந்த தாக்குதலில் வேறு எந்த நாட்டுக்கும் தொடர்புள்ளதாக நான் கருதவில்லை. இந்த தாக்குதலுக்கு இலங்கையின் தற்போதைய அரசு தேசிய பாதுகாப்பில் கோட்டை விட்டதுதான் முக்கிய காரணம் ஆகும். இந்த அரசு ஏற்கனவே முன்னேற்றம், நல்லாட்சி, பொருளாதாரம், ஊழலைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பலவற்றில் தோல்வி அடைந்ததைப் போல் பாதுகாப்பிலும் தோற்று விட்டது.

இங்குள்ள ராணுவத்தினரின் திறமையை அரசு சரிவர பயன்படுத்தவில்லை. இந்த அரசு அமைந்த 2015 ஆம் வருடம் பல மூத்த ராணுவ அதிகாரிகளை பொய்க்குற்றம் சாட்டி சிறையில் அடைத்து விட்டது. அத்துடன் 5000 அதிகாரிகளுக்குள்ள அதிகாரங்களை அரசு பறித்து விட்டது. தேசிய பாதுகாப்பு இல்லை எனில் மனித உரிமைகளுக்கும் பாதுகாப்பு இருக்காது என்பதை இந்த அரசு கவனிக்கவில்லை.

தற்போது இந்த தாக்குதலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என அதிகாரிகளை இந்த அரசு குறை கூறி உள்ளது. அடுத்த நாட்டில் இருந்து எச்சரிக்கை வரும் போது அதற்கான நடவடிக்கைகள் எடுக்கவும் அரசு அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவில்லை. இந்த நிலை மாற வேண்டும். அரசை பற்றி குறை கூறினால் அவர்களை இந்த அரசு பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி விடுகிறது. இதே நிலை அதிகாரிகளுக்கும் உள்ளது. இதை மாற்ற வேண்டும்.

எல் டி டி ஈ தீவிரவாதிகளை கடந்த 2009 ஆம் வருடம் முழுவதுமாக அழித்து விட்டோம். ஆயினும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் இன்னும் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராக பயிற்சி பெற அப்போது எனது அதிகாரியை அனுப்பி வைத்தேன். அதன் பிறகு அவர் ராணுவ புலனாய்வு இயக்குனராக பொறுப்பேற்றார், அவர் சைபர் கிரைம் மூலம் தீவிர வாதம் பெருகி வருவதாக தெரிவித்தார். அதை ஒட்டி நாங்கள் பல நடவடிக்கைகள் எடுத்தோம். ஆனால் 2015 ஆம் வருடம் பதவி ஏற்ற புதிய அரசு இந்த நடவடிக்கைகளை நிறுத்தி விட்டது.

எல் டி டி ஈ யை எதிர்த்து போராடும் போது இஸ்லாமியர்கள் எங்களுக்கு உதவி செய்தனர். ஆனால் அவர்கள் அப்போது ஒரு இயக்கமாக உருவெடுக்கவில்லை. எல் டி டி ஈ இயக்கத்தால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் அரசுக்கு உதவினர். ஆனால் இஸ்லாமிய திவிரவாதிகள் என்பது வேறு, இவர்கள் வேறு. இஸ்லாமிய தீவிரவாதிகளும் எல் டிடி ஈ இயக்கத்தினர் போல வன்முறையை கொள்கையாக கொண்டுள்ளனர். மற்ற இஸ்லாமியர்கள் அவ்வாறானவர்கள் இல்லை

இவ்வாறு அந்த பேட்டியில் கொத்தபாயா தெரிவித்துள்ளார்.