வன்முறை, துப்பாக்கிச்சூட்டுக்கு இடையே முடிந்த இலங்கை அதிபர் தேர்தல்! முடிவுக்காக காத்திருப்பு

கொழும்பு: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இலங்கை அதிபர் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.


அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதியுடன் இலங்கையின் தற்போதைய அதிபராக இருக்கும் சிறிசேனா பதவிக்காலம் முடிகிறது. இதையடுத்து, அந்நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்றது.
மொத்தம் 35 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். அவர்களில் கோத்தபய ராஜபக்சே, சஜித் பிரேமதாசா ஆகிய இருவரிடையே தான் கடும் போட்டி என்று சொல்லப்படுகிறது.


நாடு முழுவதும் உள்ள 12,845 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. மன்னார் பகுதியில் துப்பாக்கிச்சூடு, 69 இடங்களில் வன்முறை என வாக்குப்பதிவு நிறைவு பெற்று இருக்கிறது.


இந்த முறை 35 வேட்பாளர்கள் என்பதால், இலங்கை தேர்தல் வரலாற்றில் பெரும் திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் 50%க்கும் அதிகமான வாக்குகளை பெறுபவரே வெற்றி பெறுவார்.
எந்த வேட்பாளரும் 50%க்கும் அதிக வாக்குகளை பெறாவிட்டால் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் வெற்றி தீர்மானிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, வாக்குப்பதிவு முடிந்த பிறகு கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு தேர்தல் ஆணையம், அமைதியாக வாக்குப்பதிவு நிறைவடைந்து இருக்கிறது என்று கூறி இருக்கிறது.