லண்டன்: இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் ஆட்டத்தில், இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து, மொத்தம் 264 ரன்களை எடுத்தது.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்ததது.

பும்ரா, பாண்ட்யா மற்றும் ஜடேஜா அதிரடியில், இலங்கை அணி வெகு விரைவிலேயே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இனி அவ்வளவுதான்! இலங்கை அணி 200 ரன்களை எட்டுவதே கடினம் என்றே கணிக்கப்பட்டது.

ஆனால், அதன்பிறகு ஜோடி சேர்ந்த மேத்யூஸ் – திருமன்னே ஜோடி ஆட்டத்தை வேறு போக்கில் எடுத்துச்சென்றது. திருமன்னே 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இந்தியாவுக்கு எதிராக பொதுவாக சிறப்பாக ஆடும் மேத்யூஸ் 113 ரன்களை அடித்துவிட்டுதான் ஓய்ந்தார்.

இதனால், இலங்கை அணி 270 ரன்களை எளிதாக கடக்கும் என்ற நிலை உருவானது. தனஞ்செயா 29 ரன்களை எடுத்தார். இறுதியில், 7 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களை குவித்தது இலங்கை.

இந்திய தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இப்போட்டியில் புவனேஷ்குமார் சொதப்பினார். ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றி 73 ரன்களை வாரி வழங்கினார்.

265 ரன்களை விரட்டும் இந்திய அணியில், தற்போது துவக்க இணையான ராகுலும் ரோகித்தும் ஆடி வருகின்றனர். 3.2 ஓவர்களில் இந்தியா 27 ரன்களை எடுத்துள்ளது.