கொழும்பு

முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடத்துவதற்காக இலங்கை நாடாளுமன்றத்தைப் பதவிக்காலம் முடியும் ஆறு மாதம் முன்பே கலைக்க அதிபர் கொத்தபாய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் கொத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்று அதிபர் ஆனதை ஒட்டி இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்தார்.  கொத்தபாய தனது சகோதரர் மகிந்த ராஜபக்சேவை இடைக்கால பிரதமராக நியமனம் செய்தார்.  இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைய உள்ளது.

முன்பு சிறிசேனா அதிபராகவும் ரணில் விக்ரமசிங்கே பிரதமராகவும்  இருந்த போது அதிபரின் அதிகாரங்களைக் குறைத்து நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.  தற்போதைய அதிபர் கொத்தபாய வுக்கு இது மிகவும் தடையாக உள்ளது.   ஆகவே இதில் மீண்டும் திருத்தம் கொண்டு வர கொத்தபாய விரும்புவதாகக் கூறப்படுகிறது.

இதற்குத் தேவையான பெரும்பான்மை கொத்தபாய கட்சியில் உள்ளதால் நாடாளுமன்றத்தைக் கலைத்துத் தேர்தலை நடத்த கொத்தபாய விரும்புவதாக  கூறப்பட்டது.   இதை இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதி செய்தார்.  இந்நிலையில் கொத்தபாயே ராஜபக்சே நேற்று அளித்த உத்தரவில் இலங்கை நாடாளுமன்றத்தை ஆறு மாதங்கள் முன்பே கலைத்து விரைவில் தேர்தல் நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.