ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா இடத்தில் வருகிறது புதிய நிறுவனம்! ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு

டெல்லி: ஸ்ரீபெரும்புதூரில் மூடப்பட்டுள்ள நோக்கியா ஆலையை பின்லாந்து நிறுவனம் வாங்கியுள்ளதால், ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது.

செல்போன் வளர்ச்சியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியது நோக்கியா நிறுவனம். ஸ்ரீபெரும்புதூரில் அந்த ஆலை அமைக்கப்பட்டு உற்பத்தியும் சிறப்பாக நடைபெற்று வந்தது.

வரி விஷயத்தில், 2013ம் ஆண்டு வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். தொடர்ந்து சிக்கல் எழுந்ததால் ஆலை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட பின்னர் மூடப்பட்டது.

இந் நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் மின்னணு பொருட்களை உற்பத்தி செய்யும் புதிய நிறுவனம் தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறி உள்ளார்.

இது குறித்து அவர் நாடாளுமன்றத்தில் கூறியதாவது: அந்த ஆலையை பின்லாந்தின் சேல்கோம்ப் என்ற நிறுவனம் வாங்கி இருக்கிறது. இந்த நிறுவனமானது, ஐபோன்களுக்கு சார்ஜர் வினியோகம் செய்யும் பெரிய நிறுவனம்.

அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மார்ச் 2020ம் ஆண்டுவாக்கில் அந்த நிறுவனம் தமது உற்பத்தியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக 2,000 கோடி ரூபாயை அடுத்த 5 ஆண்டுகளில் முதலீடு செய்கிறது.

கிட்டத்தட்ட 70 சதவீதம் வரை தமது உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்யும். இந்த நிறுவனத்தின் மூலம் நேரடியாக 10,000 பேரும், மறைமுகமாக 50,000 பேரும் வேலைவாய்ப்பு பெறுவர் என்று கூறினார்.