“எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக அங்கீகாரத்தை ரத்து செய்து, விசாரணை நடத்த வேண்டும்” :  டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

“எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மருத்துவ மாணவர் சேர்க்கை மோசடி குறித்து உயர்நிலை விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்”  என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“ எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக (வேந்தர் மூவிஸ்) மதனிடம் பணம் கொடுத்ததாகவும், ஆனால் தங்களுக்கு இடம் வாங்கி தரப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

பச்சமுத்து ( எ) பாரிவேந்தர் - ராமதாஸ்
பச்சமுத்து ( எ) பாரிவேந்தர் – ராமதாஸ்

இந்த புகாருக்கும், எஸ்.ஆர்.எம் குழுமத்திற்கு தொடர்பு இல்லை என்று அந்த குழுமத்தின் வேந்தர் பச்சமுத்து கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமமானது.

எஸ்.ஆர்.எம் குழும மருத்துவக் கல்லூரிகளில் கடந்த 8 ஆண்டுகளாக தன் மூலம் தான் மாணவர் சேர்க்கை நடந்ததாக மதன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதால், மாணவர் சேர்க்கையில் மோசடி நடந்திருப்பது உறுதியாகி விட்டது.

எனவே எஸ்.ஆர்.எம் குழும மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதுடன், பல்கலைக்கழக மானியக் குழு, மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அடங்கிய உயர்நிலைக்குழு விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்” – இவ்வாறு தனது அறிக்கையில்  ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.