டெல்லி:
இந்திய கண்டுபிடிப்பான “கோவாக்சின்” கொரோனா தடுப்பூசி சோதனைக்கு, தமிழகத்தில் ஒரே ஒரு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளது. சென்னையை அடுத்துள்ள காட்டாங்கொளத்தூரில் செயல்பட்டு வரும்  எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை  தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 6லட்சத்தை கடந்துள்ள நிலையில், இதுவரை, தொற்று பரவலை தடுக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட வில்லை.
உலகம் முழுவதும் 600க்கும் மேற்பட்டநிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்தியாவிலும் பல நிறுவனங்கள் அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
இந்த நிலையில், பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துடன்   இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இணைந்து கொரோனா தடுப்பு ஊசி கண்டுபிடிக்கும் நடவடிக்கை யில் ஈடுபட்டு வந்தது.
இந்த ஆய்வின் மூலம் “கோவாக்சின்” என்ற மருந்து தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த மருந்தினை மனிதர்களுக்கு கொடுத்து சோதனை நடத்த நாடு முழுவதும் 13 மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்க ளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மட்டுமே கொரோனா மருந்து சோதனைக்கான அனுமதி பெற்றுள்ளது.
அதன்படி,  விசாகப்பட்டினம், ரோஹ்தக், புது தில்லி, பாட்னா, பெல்காம் (கர்நாடகா), நாக்பூர், கோரக்பூர், காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் (தமிழ்நாடு), ஹைதராபாத், ஆர்யா நகர், கான்பூர் (உத்தரபிரதேசம்) மற்றும் கோவாவில் உள்ள நிறுவனங்கள் சோதனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அனுமதி வழங்கப்பட்டுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களில், மனிதர்களிடம் சோதனை நடத்த அனுமதி க்கப்பட்டு உள்ளது. கோவாக்சின்  மருந்து ஆரம்ப கட்ட சோதனைகளில் முன்னேற்றத்தை  கொடுத்துள்ளதால், மனிதர்களுக்கு சோதனை நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இந்த ஆய்வு வெற்றிபெற்றால், ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் பொது சுகாதார பயன்பாட்டிற்கான தடுப்பூசியை அறிமுகப்படுத்த ஐசிஎம்ஆர்  திட்டமிடப்பட்டுள்ளது.