கோவை:

தே.மு.தி.க. மகளிர் அணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த், “தமிழ்நாட்டில் தற்போது ஸ்டேபிள் (நிலையான) கவர்னர் இல்லை.  ஸ்டேபிள் முதல்வர் இல்லை. ஸ்டேபிள் உள்ளாட்சி இல்லை” என்று ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

கோவை வெள்ளியங்கரி மலையில் உள்ள ஈசா யோகா மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி இன்று வருகைதர உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தே.மு.தி.க. மகளிர் அணி தலைவர் பிரேமலதா விஜயகாந்தும் வந்திருக்கிறார்.

கோவை விமான நிலையத்தில் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “புதுக்கோட்டை மாவட்டத்தில் இப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல் படுத்த மத்திய அரசு முனைந்திருக்கிறது. இதை ஏற்க முடியாது. இந்தியாவே ஒரு விவசாய நாடுதான். இங்கே விவசாயத்தை அழிக்க முனையும் எந்தத் திட்டத்தையும் நாம் ஏற்க முடியாது” என்று தெரிவித்தார்.

அதோடு,”தற்போது  மத்திய அமைச்சரே மக்கள் கருத்தைக் கேட்டு அவர்களது ஆதரவோடுதான் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று கூறியிருக்கிறார். இதை வரவேற்கிறோம்” என்றார்.

தமிழக அரசின்செயல்பாடு குறித்த கேள்விக்கு, “இங்கே எதுவும் நிலையாக இல்லையே…  இங்கே ஸ்டேபிள் கவர்னர் இல்லை.  ஸ்டேபிள் முதல்வர் இல்லை. ஸ்டேபிள் உள்லாட்சி இல்லை” என்று ஆவேசமாகக் கூறினார்.

பிறகு, “விரைவில் உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல.. சட்டமன்ற பொதுத்தேர்தலும் வரும். அப்போது மக்களுக்கு நிலையான தலைவர், நிலையான ஆட்சி கிடைக்கும்” என்று தெரிவித்தார்.