அரசு ஹெலிகாப்டர் நிறுவன பங்குகளை விற்க தொழிற்சங்கம் எதிர்ப்பு

மும்பை

ரசு ஹெலிகாப்டர் நிறுவனமான பவன் ஹன்ஸ் நிறுவன பங்குகளை விற்பதற்கு சிவில் விமான ஊழியர் தொழிற்சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்திய சிவில் விமானத்துறையின் கீழ் பவன் ஹன்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது.   இந்த நிறுவனம் ஹெலிகாப்டர்களை நிர்வகித்து வருகிறது.    இந்த நிறுவனத்தின் பங்குகளில் 51% தனியாருக்கு விற்க அரசு முடிவு செய்தது.  மீதமுள்ள 49% பங்குகள் அரசு நிறுவனமான ஓஎன்ஜிசி இடம் உள்ளன.  இதற்கான சர்வதேச ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புக்கு மிகக் குறைந்த அளவிலே ஒப்பந்தங்கள் வந்தன.   வந்த விண்ணப்பங்களிலும் குறைவான விலையே கேட்கப்பட்டிருந்தன.   அதனால் அரசு மறு ஒப்பந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கைக்கு அகில இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை ஊழியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.   இந்த சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் சுரேஷ் பிரபுவை சந்தித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.  அத்துடன் தங்கள் கருத்தை ஒரு மனுவாக அமைச்சரிடம் அளித்துள்ளனர்.

அந்த மனுவில், “பவன் ஹன்ஸ் தற்போது லாபம் ஈட்டும் அரசு நிறுவனமாக உள்ளது.   அந்த நிறுவனத்தின் பங்குகளை விற்க அரசு உத்தேசித்த போது அதற்கு சரியான விலை யாரும் அளிக்க முன் வரவில்லை என அறிந்தோம்.  இந்நிலையில் இந்த பங்குகளை அரசு விற்க வேண்டாம் என நாங்கள் எங்கள் சங்கத்தின் மூலம் கோரிக்கை விடுக்கிறோம்.   இதனால் ஊழியர்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும்.   மேலும் அரசுக்கு இந்த நிறுவனத்தின் மூலம் கிடைத்து வரும் லாபமும் தொடர்ந்து கிடைக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.