இதுவரை 738 கோடி வெள்ள நிவாரண நிதி: கேரள சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் முதல்வர் தகவல்

திருவனந்தபுரம்:

ழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு  இதுவரை 738 கோடி ரூபாய் வெள்ள நிவாரண நிதியாக திரண்டுள்ளது என்று முதல்வர் பிரனாயி விஜயன் கூறினார்.

கேரளாவில் கடந்த 8ம் தேதி முதல் பெய்து வந்த பேய்மழை காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் பலத்த சேதத்தை எதிர்கொண்டன. பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏராளமான வீடுகள் நொறுங்கி மக்கள் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர்.

இந்த நிலையில், கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பாதிப்புக்காக மத்திய அரசு ரூ.600 கோடி முதல்கட்ட நிவாரணமாக ஒதுக்கியும்ம், அதிதீவிர பேரழிவாக மத்திய அரசு அறிவித்தது. கேரளாவுக்கு நாடு முழுவதும் இருந்து உதவிகள் குவிந்து வருகின்றன.

தற்போது மழை ஓய்ந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். மழையால் சேதமான கேரளத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் கேரள அனைத்துக்கட்சி கூட்டத்தில்  வெள்ளப்பாதிப்பு குறித்து சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்று சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும், முதல்வர்   பினராயி விஜயன் கேரளாவில் மழையால் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். தொடர்ந்து மழை வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். அதையடுத்து  மழை வெள்ள சேத நிலவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதில், கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேரழிவு இப்போது ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் கொட்டித்தீர்த்த மழையும், அதனால் ஏற்பட்ட வெள்ள பெருக்கிலும் சிக்கி 483 பேர் பலியாகி உள்ளனர். 14 பேர் மாயமாகி உள்ளனர். இவர்களை பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

14 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

மழையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கி இருந்தவர்களுக்கு உடனடி உதவிக்காக மத்திய அரசு நிதியில் இருந்து ரூ.3800-ம், மாநில அரசு கூடுதலாக ரூ.6200-ம் என ரூ.10 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது.

வெள்ள நிவாரண பணிகளில் 40 ஆயிரம் போலீசார் ஈடுபட்டனர். இவர்களுடன் 3200 தீயணைப்பு வீரர்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டனர்.

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி மீட்பு பணிகளில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டுகிறேன். அவர்களுக்கு இந்த அரசு வீரவணக்கம் செலுத்துகிறது.

கேரளம் இந்த பாதிப்பில் இருந்து மீண்டு எழும். அதற்கான நடவடிக்கைகளை அனைவரும் ஒன்று சேர்ந்து எடுப்போம்.

கேரளாவில் 5700 ஹெக்டேர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. இன்னும் 59,200 பேர் நிவாரண முகாம்களில் தான் இருக்கிறார்கள்.

மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டெழ கேரளாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் வருகிறது. முதல்-மந்திரியின் வெள்ள நிவாரண நிதிக்கு ஏராளமானோர் நிதி உதவி செய்து வருகிறார்கள்.

கடந்த 28-ந் தேதி வரை நிவாரண நிதியாக ரூ.738 கோடி சேர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து, கூட்டத்தில் வெள்ள நிவாரணம், மறுகட்டமைப்பு, சீரமைப்பு பணிகள், நிவாரண உதவி வழங்குவது குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..

You may have missed