Random image

ஸ்டாலினும், அழகிரியும் இணைந்து செயல்பட வேண்டும்: மதுரை ஆதினம்

மதுரை:

திமுக தலைவர் ஸ்டாலினும், அழகிரியும் இணைந்து செயல்பட வேண்டும் என்று  மதுரை ஆதினம் கூறி உள்ளார்.

ஏற்கனவே கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது, அவரை காண வந்த மதுரை ஆதினம்,  ஸ்டாலினும், கனிமொழியும் இணைந்து கட்சியை நடத்த வேண்டும் என்று கூறியிருந்த நிலையில், தற்போது ஸ்டாலினும், அழகிரியும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறி உள்ளார்.

பரபரப்புக்கு பேர் போன மதுரை ஆதினம், முதலில் திமுகவில் இருந்து அரசியல் செய்து வந்தார். பின்னர் அங்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து  ஜெ.முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமானார். தொடர்ந்து,  அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த மதுரை ஆதினம்  இடையில் சில காலம் அமைதியாக காணப்பட்டார்.

ஆட்சிக்கு தகுந்தாற்போல் தி.மு.க.விடமும், அ.தி.மு.க.விடமும் நெருக்கம் காட்டி வந்த மதுரை ஆதினம்,  ஆன்மீக வாழ்க்கையில், நித்யானந்தவுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக அவரை இளைய மடாதிபதியாக நியமனம் செய்தாக  சர்ச்சை உருவானது. இதுதொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், ஜெ. உடல்நலம் இல்லாமல் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது,  முதல்வர் நல்ல உடல்நலன் பெற்று, தானாகவே உணவு உட்கொண்டு வருகிறார்கள். நன்றாகப் பேசுகிறார்கள். இறைவனது பேரருளால் மக்களுடைய தொடர் பிரார்த்தனையால் உடல்நலம் பெற்றுள்ளார்கள், இன்னும் 10 நாள்களில் முதல்வர் போயஸ் தோட்டத்துக்கு திரும்பி விடலாம் என்று கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 6ந்தேதி  மதுரை ஆதினம் பேசினார்.

அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை 29ந்தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதியை சந்திக்க வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், கருணாநிதி உடல்நிலை சீராகி வருவதாகவும், அவர் உடல்நலம் பெற்று திரும்பும்வரை திமுகவை ஸ்டாலினும், கனிமொழியும் இணைந்து நடத்த வேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனம், ஸ்டாலினும், அழகிரியும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.

மேலும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோயில்களில் ஊழலை ஒழிக்க முடியாது என்றவர், நித்யானந்தா தரப்பால் தனக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்றும், ஆனால்,  அவர் மீண்டும் ஆதீன மடத்திற்குள் வர இயலாது என்றும் கூறினார்.

ரஜினி குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஆதீனம், ரஜினி அரசியலுக்கு முழுமையாக வரவில்லை என்றவர்,  எம்.ஜி.ஆர் போன்று எல்லா நடிகர்களாலும் வரமுடியாது என்று அதிரடியாக தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட மாணவி குறித்து கருத்து தெரிவித்த ஆதினம், இந்த விவகாரத்தில் சோபியா கைது செய்யப்பட்டிருக்க கூடாது, அவரை அழைத்து பேசியிருக்க வேண்டும். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சத்தம் போட்டது இயல்பு தான், அவர் அவரின் கடமையை செய்திருக்கிறார் என்றார்.