சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் திமுக கண்டிப்பாக போட்டியிடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, தேமுதிக, திமுக கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை என்பது உறுதியாகி உள்ளது.

நாடு முழுவதும் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடை பெற இருக்கும் சூழலில், தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டணி தொடர்பான பேச்சுக்கள்  முடிந்து திமுக, அதிமுக தலைமையில் கூட்டணிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால், தேமுதிக, திமுக மற்றும் அதிமுக கட்சிகளிடம் கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில், தேமுதிகவின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று கூறிய, திமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடித்து, எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.

அதுபோல, அதிமுகவும் தாங்கள் கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக்கொண்டால் கூட்டணி என்று கறாராக கூறிவிட்டது. இந்த நிலையில், தேமுதிகவினர், மீண்டும் துரைமுருகன் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசினர். அவரும், தேமுதிகவிற்கு ஒதுக்க திமுகவிடம் தொகுதி இல்லை என்று கைவிரித்து விட்டார்.

இந்த நிலையில், தேமுதிக பேசியது குறித்து, திமுக தலைவர் ஸ்டாலினும், துரைமுருகனும் ஆலோசனை நடத்தினார். அப்போது, தேமுதிகவிற்கு தொகுதிகளை ஒதுக்க முடியாது என  ஸ்டாலின் திட்டவட்டமாக கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதி உள்ள கடிததத்தில்,  நாடாளுமன்ற தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் போட்டி என்று தெரிவித்து உள்ளார்.  20 தொகுதிகளில் திமுகவும், 20 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளும் போட்டி என்கிற முடிவு இறுதியானது என்றும். , திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற உற்சாகமாக பணியாற்ற வேண்டும் என்றும்  மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.