கள்ளக்குறிச்சி:

செல்லுமிடமெல்லாம் தமிழக அரசை பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் பொய்யுரைத்து வருகிறார் என்று கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தொடக்க விழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

நீங்கள் ஆட்சியில் இருந்தபோது ஏழை எளிய மக்களுக்காக என்ன செய்திர்கள்?  என்று ஸ்டாலினுக்கு ஆவேசமாக கேள்வி எழுப்பிய முதல்வர், மக்களுக்காக பார்த்து பார்த்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம் என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், அதிமுக ஆட்சியில்  செய்துள்ள சாதனைகள், நிறைவேற்றப்பட்ட திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புள்ளி விபரங்களுடன் பட்டியலிட்டார்.

‘‘மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான்” என்ற அம்மாவின் கோட்பாட்டில் உள்ள நாங்கள், சொன்னதைச் செய்வோம், செய்வதைத் தான் சொல்வோம். அவ்வாறு சட்டமன்றத்தில் நான் அறிவித்த அறிவிப்புகளுக்கு இணங்க, தற்போது இந்தப் புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் பிரதான தொழில் விவசாயம். எனவே, திண்டிவனம் அருகே பிரம்மாண்டமான உணவுப் பூங்கா உருவாக்கவுள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை இங்கே விற்பதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். உணவுப் பூங்காவில் ஆன் லைன் மூலம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இம்மாவட்ட மக்களின் நலனைக் கருதி, சில அறிவிப்புகளை இங்கே வெளியிடுவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்,.

கள்ளக்குறிச்சி நகரத்திற்கு 23 கி.மீ. நீளசுற்றுவட்டச் சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நகரத்திலுள்ள போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சுற்று வட்டச் சாலை அமைக்க அரசு நடவடிகை எடுக்கும்.

உளுந்தூர்பேட்டை வட்ட மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

ரிஷிவந்தியத்தில் அரசு இருபாலர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க அம்மாவினுடைய அரசு நடவடிக்கை எடுக்கும். புதிய கல்லூரி அங்கே உருவாக்கப்படும்.

கள்ளக்குறிச்சி வட்டம், கொங்கராயப்பாளையம் –கண்டாச்சிமங்கலம் கிராமம் அருகே மணிமுக்தா ஆற்றில் 8 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஓர் தடுப்பணை அமைக்கப்படும்.

உளுந்தூர்பேட்டை வட்டம் கிழக்கு, மருதூர் கிராமம் அருகே கெடிலம் ஆற்றில் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்படும்.

சங்கராபுரம் வட்டம், பூட்டை கிராமம் அருகே மணி நதியில் 2 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்படும்.

உளுந்தூர்பேட்டை வட்டம், கூ.கள்ளக்குறிச்சி கிராமம் அருகே நரியன் ஓடையில் 2 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்படும். இத்தடுப்பணை திட்டங்களினால் சுமார் 665 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.

உளுந்தூர்பேட்டை பேரூராட்சி 3.68 எம்.எல்.டி பாதாள சாக்கடைத் திட்டம், 38.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்பதைதெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்த பேசியவர்,  இதுபோன்று அம்மாவின் அரசு எண்ணற்ற சாதனைகளை செய்திருக்கிறோம். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் போகிற பக்கமெல்லாம் இந்த ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அம்மாவின் மறைவுக்கு பின்னர் அம்மாவின் திட்டங்களை சிந்தாமல் சிதறாமல் மக்களுக்கு அளித்து வருகிறோம். எனவே தான் இந்த அரசு செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டு கூறுகிறேன் என்றவர் தனது ஆட்சி காலத்தில் நடைபெற்ற திட்டங்கள் குறித்து பட்டியலிட்டார்.

இறுதியில், அங்கு வேளாண்மைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியையும் மற்றும் தீயணைப்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியையும் பார்வையிட்டார்.