Random image

கருணாநிதியை மிரட்டியே என்னை கட்சியில் இருந்து நீக்கினர்: அழகிரி பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலமில்லாதபோது அவரை மிரட்டி, வற்புறுத்தியே என்னை கட்சி விட்டு நீக்கினர் என்று மு.க.அழகிரி பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.

திமுகவில் ஏற்பட்ட குடும்ப மோதல் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 25-ந்தேதி கட்சியில் இருந்து மு.க.அழகிரி  நீக்கப்பட்டார். தொடர்ந்து அவர் மீண்டும் கட்சியில் சேர முயன்றும், ஸ்டாலினால் தடுக்கப்பட்ட தாக கூறப்பட்டது. இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதி காலமானதை தொடர்ந்து மீண்டும் தன்னை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அழகிரி குரல் கொடுத்து வருகிறார். கடந்த  5ந்தேதி திமுகவுக்கு எதிராக தனியாக நின்று அமைதி பேரணியை நடத்தி திமுக தலைமையை மிரட்டினர்.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ள மு.க.அழகிரி பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்து வருகிறார்.

நடைபெற உள்ள திருமங்கலம், திருவாரூர் இடைத் தேர்தல்களில் திமுக தோல்வி அடையும் என்ற அழகிரி,  கருணா நிதியை மிரட்டி வற்புறுத்தி என்னை கட்சியை விட்டு விரட்டினர் என்று  பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு நானும் கருணாநிதியும் பேசினோம். அப்போது நேரம் வரும் பொறுமையாக இரு. தேர்தல் முடிவடையட்டும் என்றார். எங்களுக்குள் நிறைய உரையாடல்கள் நிகழ்ந்தன. அதையெல்லாம் நான் இப்போது சொல்ல மாட்டேன். அவற்றை நேரம் வரும் போது தெரிவிப்பேன் என்றார்.

தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கருணாநிதியிடம் பேசினேன்.  அப்போது, என்னை பொறுமை காக்குமாறும் கட்சியில் விரைவில் இணைத்து கொள்வேன் என்றும் இது தற்காலிக நீக்கம்தான் என்றும் என்னிடம் அவர் கூறினார்.

கருணாநிதி உடல்நிலை சரியில்லாத போது அவரை மிரட்டி, பணிய வைத்து என்னை கட்சியிலிருந்து நீக்கி விட்டனர். இதுதான் உண்மை என்று பகிரங்கமாக ஸ்டாலின் மீது குற்றம் சாட்டினார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலின் போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கட்சி குறித்து பேசுவதற்கு இது சரியான தருணம் என நினைக்கவில்லை என்ற அழகிரி, கருணாநிதி இறப்பதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்னர் கூட நாங்கள்   பேசிக் கொண்டோம். ஆனால் அப்போது அரசியல் குறித்தோ கட்சி குறித்தோ நாங்கள் பேசவில்லை என்றார்.

திமுக  கட்சிக்கு எதிராக நான் இதுவரை எதையும் செய்ததில்லை. என்னை கட்சியிலிருந்து நீக்கிய பிறகு வைகோ, எச் ராஜா உள்ளிட்டோர் என்னை வந்து சந்தித்ததாக கூறிய அழகிரி,  கருணாநிதிர உடல்நிலை சரியில்லாத போதுஅப்போது விருதுநகரில் வைகோ போட்டியிடுவதாக கூறினார். அதையடுத்து அவரை நான் விமான நிலையத்தில் பார்த்தேன். என்னை என் வீட்டில் வந்து அவராகவே பார்த்துவிட்டு சென்றார்.

வைகோ என்னை சந்தித்ததற்காக நீக்கியதாக கூறும் இவர்கள் இன்று அதே வைகோவுடன் இருக்கிறார்களே. அதே வைகோ ஸ்டாலினை முதல்வராக்குவேன் என சவால் விடுத்துள்ளார்.

இவ்வாறு அழகிரி கூறினார்.