காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுல்காந்திக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை :

வகுப்புவாதம் நாட்டை ஆக்கிரமிக்கும் நேரத்தில் நம்பிக்கை ஒளியாக ராகுல்காந்தி திகழ்வதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்திக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலில் வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ‘‘காங்கிரஸ் பேரியக்கத்தின் தனித்துவம் மிகுந்த பாரம்பரியத்தை யாராலும் மறுத்திட முடியாது. அந்த இயக்கத்தின் தற்போதைய வயது 132. காங்கிரஸ் நம்நாட்டின் பழம்பெரும் கட்சி. வரலாற்று சிறப்பு அக்கட்சிக்கு தலைவரை தேர்ந்தெடுக்கும் தருணம் அக்கட்சிக்கு மட்டுமின்றி நமது தேசத்திற்கும் முக்கியமான கட்டமாகும். காங்கிரஸ் தலைவர் பொறுப்புக்கு ராகுல்காந்தி முன்மொழியப்படுவது வரலாற்றுடன் இணைந்த சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாகும்.

வகுப்புவாதத்தை முறியடிக்க இந்திய மக்களுக்காக தங்களை முழுவதுமாக அற்பணித்துக் கொள்ளும் அவர்களின் குடும்பத்தின் நீண்ட நெடிய வரலாற்றின் தொடர்ச்சியாக ராகுல்காந்தி இருக்கிறார். வகுப்புவாத மற்றும சர்வாதிகார எண்ணம் கொண்ட சக்திகள் நமது நாட்டை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் இந்த வேளையில் அவர் நம்பிக்கையின் ஒளியாகத் திகழ்கிறார்.

காங்கிரஸ் தலைவர் பொறுப்பிற்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற வேண்டும். ஜனநாயகம் மதச்சார்பற்ற தன்மை சோஷியலிசம் எனும் மகத்தான லட்சியங்களை மீட்டெடுக்கும் வகையில் ராகுல்காந்தி திறம்பட செயல்பட வேண்டும் வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.