சென்னை

திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு தேவை இல்லை என மு க ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியம் இருமடங்காக உயர்த்தப் பட்டுள்ளது.  இது குறித்து இன்று சட்டசபையில் விவாதம் நடை பெற்றது.   இந்த விவாதத்தின் போது மு க ஸ்டாலினும் துணை முதல்வர் பன்னீர் செல்வமும் காரசாரமாக மோதிக் கொண்டனர்.

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின், “உறுப்பினர்களுக்கு எதற்கு சம்பள உயர்வு என நாங்கள் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பி கடிதம் வழங்க உள்ளோம்.   திமுக உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு தேவை இல்லை.   அந்த பணத்தை நாங்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குகிறோம்.  எங்களுக்கு ஊதிய உயர்வு தேவை இல்லை என ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளோம்” என கூறினார்.

அதற்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம், ”எல்லா உறுப்பினர்களும் வசதியாக இல்லை.   உதாரணமாக அதிமுக உறுப்பினரான சித்ரா இன்னமும் தொகுப்பு வீட்டில்தான் வசித்து வருகிறார்.   இந்த ஊதிய உயர்வு பற்றி ஆறுமாதமாக பேசப்பட்டு வருகிறது.   அப்போதெல்லம் ஒன்றும் பேசாத ஸ்டாலின் இப்போது மட்டும் ஏன் பேச வேண்டும்” என பதிலளித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “ நமது சட்ட மன்ற உறுப்பினர்களை நாமே காப்பாற்ற விட்டால் வேறு யார் காப்பாற்றுவார்கள் ?” என கேள்வி எழுப்பி உள்ளார்.