சென்னை: பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாடும் ஆட்சியாளர்கள், வெறும் ஏட்டளவில் பேசிக்கொண்டிராமல், நடைமுறை ரீதியில் பெண் சிசுக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

டுவிட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக ஸ்டாலின் கூறியிருப்பதாவது, “பெண்மையைப் போற்றும் தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமைக்கு அவமானமாக, மீண்டும் பெண் சிசுக்கொலை தலைதுாக்குவது வேதனை அளிப்பதாய் உள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, செக்கானுாரணி அருகில், புள்ளநேரி கிராமத்தில், இரண்டாவதாகப் பிறந்த பெண் குழந்தையை பெற்றோரே கள்ளிப்பால் ஊற்றி கொன்றிருப்பது நெஞ்சைப் பதற வைப்பதாய் உள்ளது.

இந்தச் செயலில் ஈடுபட்டோர் மற்றும் அதற்கு துணை நின்றோர் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மீதான பாலியல் வன்முறை, உசிலம்பட்டி அருகே பெண் சிசுக்கொலை என தமிழகம் தற்போதைய நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாகி வருகிறது.

இந்நிலையில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாடும் ஆட்சியாளர்கள், வெறும் ஏட்டளவில் இல்லாமல், நடைமுறையில், பெண் சிசுக்களை பாதுகாக்க வேண்டும்” என்றுள்ளார்.