முடி சூட்டப்படுகிறார் ஸ்டாலின்: பரபரப்பான சூழ்நிலையில் திமுக பொதுக்குழு கூடியது

சென்னை:

ரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக பொதுக்குழு, திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கூடியது. இன்றைய கூட்டத்தில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் முடிசூட்டப்படுகிறார்

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு கூடும் இந்த பொதுக்குழுவில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவி உயர்வு பெறுகிறார். இன்றைய திமுக பொதுக்குழு  தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுகவின் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான  கருணாநிதி, ஆகஸ்ட் 7 ம் தேதியன்று உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் காலமானார்.  அதைத்தொடர்ந்து திமுகவில் தலைவர் பதவி காலியானது.

இந்த பதவியை தற்போதைய திமுக செயல்தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் ஏற்க வேண்டும் என்று திமுகவில் ஒரு தரப்பினர் குரல் கொடுத்து வந்தனர். அதற்கேற்றார்போல திமுக தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் அறிவிக்கப்பட்டது. இதில், தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு திமுக முதன்மை செயலாளர் துரைமுருகனும் மனு தாக்கல் செய்தனர். அவர்களை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யாததல், அவர்கள் இருவரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் இன்று பொதுக்குழுவில் பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், ஏற்கனவே கருணாநிதியால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி மீண்டும் கட்சிப்பதவிக் கட்டு மிரட்டி வருகிறார். இந்த பரபரப்பான சூழ்நிலையில்,  திமுக பொதுக்குழு இன்று காலை கட்சி தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் கூடியது.

பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதாக தீனது வீட்டில் இருந்து புறப்பட்ட மு.க.ஸ்டாலின், கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று தந்தை கருணாநிதியின் படத்திற்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சென்னை தி.நகரில் உள்ள முன்னாள் எம்எல்ஏ மறைந்த அன்பில் பொய்யாமொழி வீட்டிற்கு சென்று அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு து அண்ணா அறிவாலயம் வந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மு.க.ஸ்டாலின் கலைஞர் அரங்கிற்கு வந்ததும் சுமார் 10 மணி அளவில்  பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.