கொரோனாவைவிட மோசமானவர் ஸ்டாலின்…. பேச்சை ரசித்த விஜயகாந்த்..

துரை அருகே உள்ள திருப்பரங்குன்றத்தில் தே.மு.தி.க.சார்பில் நேற்று(ஞாயிறு) உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
மேடையின் முதல் வரிசையில் தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த், அவரது மனைவியும் பொருளாளருமான பிரேமலதா, விஜயகாந்தின் மச்சானும், கட்சியின் துணை செயலாளருமான எல்.கே.சுதீஷ் மற்றும் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு அரசியல்வாதிகள், மேடையை பங்கு போட்டு- முதல் வரிசையில் அமர்ந்திருந்தது- இந்திய அரசியல் வரலாற்றில் அநேகமாக இதுதான் முதன் முறையாக இருக்கும்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயகாந்த், தன் கட்சி மேடையில் தோன்றுவதால் அவரை பார்க்க ஓரளவு கூட்டம் திரண்டிருந்தது.
ஆனாலும் இந்த கூட்டத்தை ‘மாநாடு’ என்று வர்ணித்த பேச்சாளர்கள், தங்கள் வாழ்நாளில் மாநாட்டை டி.வி.யில் கூட பார்த்திருக்க மாட்டார்கள் என்றே சொல்லலாம்.

‘’மக்களுக்கு ஒன்று என்றால் நான் சும்மா விட மாட்டேன்’’ என்ற ஒற்றை வார்த்தையோடு பேச்சை நிறுத்திக்கொண்ட விஜயகாந்த், ‘’பத்திரமாக வீட்டுக்கு போங்க’’ என்று நாற்காலியில் அமர்ந்தபடியே பேசி முடித்தார்.

இந்த வார்த்தைகளையும் அவர் தடுமாறி, தடுமாறித்தான் உச்சரிக்க வேண்டி இருந்தது. கூட்டத்தினர் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்தது உண்மை. விஜயபிரபாகரன் பேச்சும் ஏமாற்றம் அளித்தது.

சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த கூட்டத்தில் அவர், ரஜினியையும், கமலையும் பின்னி எடுத்திருந்தார்.
அது விமர்சனத்துக்கு ஆளானது.

எனவே இந்த கூட்டத்தில்’’ கேப்டனுக்கு ஓட்டு போடாததால் அவரை நீங்கள் ‘மிஸ்’ பண்ணீட்டீங்க ..இதனால் அவருக்கு இழப்பு இல்லை.உங்களுத்தான் இழப்பு. அவர் முதல்வர் ஆனால் தமிழ்நாடு வல்லரசாகும்’’ என்று கூறி முடித்துக்கொண்டார்.
பிரேமலதா கடந்த சில வருடங்களாக பேசி வருவது போல்’’கேப்டன் பழைய கம்பீரத்துடன் சிங்கம் போல் எழுந்து, தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்து மக்களை விரைவில் சந்திப்பார்.உங்கள் பிரார்த்தனை பலிக்கும். அவர் முதல்வர் ஆவார்’’ என்று கீறல் விழுந்த ரிகார்டு போல் பேசியதை கூட்டத்தினர் ரசிக்க வில்லை.

எல்லோருக்கும் சேர்த்து, வட்டியும் முதலுமாக மச்சான் எல்.கே.சுதீஷ் வெளுத்து வாங்கினார். தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் தான், அவரது இலக்காக இருந்தது.

’’உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரசை விட மோசமான வைரஸ் ,மு.க.ஸ்டாலின்.ஓட்டு வாங்குவதற்காக அவர் தமிழக மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறார்’’ என்று உச்சஸ்தாயியில், ஸ்டாலினை அர்ச்சித்த சுதீஷ், காமெடியாக பேச்சை முடித்தார்.

‘’ 2021 ஆம் ஆண்டு தேர்தலில் தே.மு.தி.க. அங்கம் வகிக்கும் கூட்டணி 190 தொகுதிகளை கைப்பற்றும். இதை உளவுத்துறையே அரசுக்கு தகவலாக கொடுத்துள்ளது.கேப்டன் தான் அடுத்த முதல்வர்’’ என்று தெரிவித்தபோது யாரும் ‘ரெஸ்பான்ஸ்’ காட்டவில்லை.

ஆனால் பிரேமலதா, விஜயபிரபாகரன், சுதீஷ் பேச்சுக்களை விஜயகாந்த் ரொம்பவே ரசித்தார்.

-ஏழுமலை வெங்கடேசன்