ரகசிய வாக்கெடுப்பு…..ஜனாதிபதியிடம் ஸ்டாலின் கோரிக்கை

டெல்லி:

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை தி.மு.க. செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் இன்று மாலை சந்தித்து பேசினார். அப்போது தமிழக சட்டசபையில் நடந்த சம்பவங்கள் குறித்து முறையிட்டார்.

 

மேலும் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார். ஸ்டாலினுடன் துரைமுருகன், திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரும் சென்றனர்.

பின்னர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்று ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம். ஆட்சியாளர்களுக்கு சாதகமாக சபாநாயகர் தனபால் நடந்து கொண்டார். எதிர்கட்சி உறுப்பினர்களை வேண்டுமென்றே வெளியேற்றினார். உ.பி. ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் ரகசிய வாக்கெடுப்பு நடந்துள்ளது.


இதனை சுட்டிக்காட்டி தமிழக சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். எங்களின் கோரிக்கை ஜனாதிபதி பரிசீலிப்பார் என நம்புகிறோம். அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தி.மு.க. தலையிடாது. விரைவில் தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி மலரும்’’ என்றார்.