சென்னை,

சென்னை ஐஐடி-யில்  மாட்டிறைச்சி விழா நடத்தியதற்காக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவரை தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மாட்டிறைச்சி தடைக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை ஐஐடியில் மாணவர்கள் ஒரு பிரிவினர் மாட்டுக்கறி விழா நடத்தினர்.

இதையடுத்து, விழாவை முன்னின்ற நடத்திய கேரளாவை சேர்ந்த சூரஜ் என்ற ஆராய்ச்சி மாணவனை ஒரு பிரிவு மாணவர்கள் தாக்கினர். இதன் காரணமாக ஐஐடி வளாகத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூரஜை-ஐ தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறினார்.

சூரஜ் தாக்கப்பட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனங்களை தெரிவித்ததோடு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி இருந்தார். ஆனால், தமிழக அரசு சார்பில் எந்தவித முயற்சியும் எடுக்காத நிலையில்,

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான  ஸ்டாலின் நேற்று  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சூரஜுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

இந்தச் சந்திப்பின்போது தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உடனிருந்தார். மாணவர் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் குறித்து கல்லூரி நிர்வாகமும்,  பாதிக்கப்பட்ட மாணவருக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமென  அரசுக்கும்  அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.