ஸ்டாலினுக்கு நாவடக்கம் தேவை: பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்

சென்னை:

பிரதமர் மோடியை சேடிஸ்ட் என்று கூறிய மு.க.ஸ்டாலினுக்கு நாவடக்கம் தேவை என்று மத்திய  இணை அமைச்சரும், பாஜக நிர்வாகியுமான பொன்.ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்  தெரிவித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் திருவுருவ  சிலை திறப்பு விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் ‘பிரதமர் மோடி, கஜா புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட இன்னும் வரவில்லை, புயலில் இறந்தவர்களுக்கும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும் ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. ஆனால் வட மாநிலங்களில் ஒரு பிரச்சனையென்றால் உடனே சென்று பார்வையிடுகிறார்’ என்று கூறி மோடியை ஒரு சேடிஸ்ட்  என விமர்சித்தார்.

ஸ்டாலின் பேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், பாஜக வினருக்கு பதில் அளித்த ஸ்டாலின், ’நான் தனிப்பட்ட முறையில்  மோடியை விமர்சிக்கவில்லை என்றும் நாட்டின் பிரதமர் என்ற முறையிலேயே விமர்சித்தேன் எனக் கூறினார். மேலும் மோடியை சேடிஸ்ட் என்று கூறியதில் உறுதியாக இருப்பதாகவும் கூறினார். ஒரு முறையல்ல 100 முறை சொல்வேன் மோடி ஒரு சேடிஸ்ட்’ எனக் கூறியுள்ளார்.

ஸ்டாலின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மத்திய பாஜக அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழிசை கூறும்போது,  ’ கஜா புயலால் இறந்த மக்களின் குடும்பத்தோடு நான் இருக்கிறேன் . தமிழக மக்களுக்கு வேண்டிய உதவிகளை மத்திய அரசு செய்யும் என அறிவித்துள்ளதாக கூறியவர், ஸ்டாலின்  இனி சேடஸ்ட் ஸ்டாலின் என்று அழைக்கப்படுவார்’ என தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பொன்னார், ஸ்டாலினுக்கு நாவடக்கம் தேவை என்று கூறினார். மேலும், ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்கப் போவது பற்றி அக்கட்சியின் 2-ம் கட்ட தலைவர்களுக்கே தெரியாது என்றும் தெரிவித்தார்.

மேலும்,  மத்தியக்குழு அறிக்கை சமர்ப்பித்த பிறகே, தமிழகத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்குவது என்பதை மத்திய அரசு முடிவு செய்யும்  என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  கூறினார்.