ஸ்டாலின் ஆரூடம் பொய்யானது: தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 124 ஆக உயர்வு!

சென்னை :

மிழகத்தில் நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி, நாங்குனேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழக சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் 124 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அதிமுகவினர் உற்சாகமடைந்து உள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக உடைந்து, மீண்டும் இணைந்தது. எடப்பாடி முதல்வராகவும், ஓபிஎஸ் துணைமுதல்வராகவும் இருந்து ஆட்சி செய்து வருகின்றனர். இதற்கிடையில்,  அதிமுவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 18 அதிமுக எம்எல்ஏக்கள் கொடி பிடித்ததால், அவர்கள் கட்சித்தாவல் சட்டப்படி பதவிகளை இழந்தனர்.

இதன் காரணமாக அதிமுக அரசு பெரும்பான்மை இழந்துவிட்டதாக கூறி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சியை கவிழ்க்க முயற்சி மேற்கொண்டார்.

மொத்தம்  234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டமன்றத்தில், அதிமுக பெரும்பான்மை பெற 118 உறுப்பினர் கள் ஆதரவு இருக்க வேண்டும் ஆனால், அதிமுக அரசு 113 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். இதன் காரணமாக, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தில், அதிமுக அரசு கவிழும் என எதிர்பார்க்கப்பட்டது.

திமுக தரப்பில் இருந்து சில அதிமுக எம்எல்ஏக்களுக்கு தூண்டில் வீசியதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அவரது தூண்டிலில் எந்தவொரு அதிமுக மீனும் சிக்காத நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அதிமுக நிர்வாகிகளை கட்சியில் சேர்த்து, அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த நிலையில், தமிழகத்தில் காலியாக இருந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. லோக்சபா தேர்தலுடன் 22 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றால், அதிமுக ஆட்சி கவிழும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போதைய நிலையில், திமுகவுக்கு 97 சட்டமன்ற உறுப்பினர்கள்  இருந்த நிலையில், பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்கள் தேவை என்பதால் இந்த சட்டமன்ற இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அதிமுக சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ், தமீம் அன்சாரி, தணியரசு போன்றோர் திமுகவுக்கு ஆதரவாக பேசி வந்த நிலையில், அவர்களின் ஆதரவு திமுகவுக்கு கிடைக்கலாம் என்று நம்பப்பட்டது. ஆனால், 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் முடிவி திமுக 13 தொகுதிகளிலும், அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றது.

இதன் காரணமாக, 113 உறுப்பினர்களை கொண்ட அதிமுக அரசுக்கு மேலும் 9 உறுப்பினர்கள் சேர்ந்து 122ஆக பலம் உயர்ந்தது. இதன் காரணமாக நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக அரசு வெற்றி திமுகவுக்குபெப்பே காட்டியது.

இந்த நிலையில், தற்போது நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போதும், திமுக தலைவர் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்த நிலையில், இடைத்தேர்தலுக்கு பிறகு, அதிமுக அரசு நீடிக்காது என்று கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

ஆனால், அவரது எதிர்பார்ப்பு பொய்யாகிப்போனது. இரு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று அதன்பலத்தை மேலும் கூட்டி உள்ளது. தற்போது தமிழக சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் 124 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக எஞ்சிய ஒன்றரை ஆண்டு கால ஆட்சியையும் அதிமுக அரசு பூர்த்தி செய்யும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

ஏற்கனவே அதிமுக அரசு பெரும்பான்மை இழந்துவிடும் என்று கருதி,  கலைஞரின் பிறந்தநாளான ஜூன் 3ந்தேதி தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்க இருந்ததாக தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோல, லோக்சபா தேர்தலின்போது நடைபெற்ற  22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக உறுப்பினர்கள் எம்எல்ஏக்களாக பதவி ஏற்ற நிகழ்ச்சியின்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறிய  வெயிட் அன்ட் சி என்ற வார்த்தை பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய நிலையில், அதுவும் புஷ்வானமாக போனது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்கள் எண்ணிக்கை விவரம்:

அதிமுக – 124

திமுக – 100

காங்கிரஸ் – 7

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 1

சுயேட்சை – 1 (டிடிவி தினகரன்)

சபாநாயகர் – 1

மொத்தம் 234 தொகுதிகள்

கார்ட்டூன் கேலரி