தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் ‘நீட்’ பிரச்சினையை எழுப்பிய ஸ்டாலின்: காரசார விவாதம்

சென்னை:

மிழக சட்டமன்றத்தின் இன்றைய கூட்டத்தில், நீட் தேர்வு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து காரசார விவாதங்கள் நடைபெற்றது.

நடப்பு ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது, திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் நீட் தேர்வு குறித்து சில கேள்விகளை எழுப்பினார்.

நீட் விலக்கு குறித்து மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அனுப்பிய மசோதாக்களின் நிலை என்ன?

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த ஆறாம் தேதி கடைசி நாள். இரண்டு நாட்களுக்கு முன் நீட் தேர்வை ரத்து செய்ய தமிழ்நாடு உச்சநீதிமன்றத்தில்  தொடரப்பட்டு வழக்கு எந்த நிலையில் உள்ளது? என்று கேள்வி எழுப்பியவர்,

கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டில் நீட் கொண்டுவரப்படவில்லை என்றும்,  நீட் விலக்கு பெற அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.  நீங்கள் தும்பிக்கையை விட்டு வாலை பிடித்து கொண்டுள்ளீர்கள் என அரசை குற்றம்சாட்டினார்.

இதற்கு பதில் அளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,   நீட் விவகாரத்தில் நாங்கள் துரோகம் இழைத்தவர்கள் என்றால் அந்த துரோகத்திற்கு விதை போட்டது திமுக, காங்கிரஸ் தான்  என பதில் அளித்தார்.

இதைத்தொடர்ந்து இரு கட்சிகள் இடையே காரசார விவாதங்கள் நடைபெற்றன.

அப்போது பேசிய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், முன்னாள்  முதல்வர் ஜெயலலிதா இருந்த போது நீட் தமிழகத்தில் தலைதூக்க வில்லை ஆனால் இப்போது நீட் தமிழகத்தில் உள்ளே நுழைந்துள்ளது, இதற்கு  யார் காரணம் என்று கேள்வி எழுப்பியவர்,  அதற்கு நீங்கள்தான் காரணம் என்றார்.

தற்போது உச்ச நீதிமன்றத்தில் நீர் பிரச்சினைக்காக வழக்குப் போட்டு இருக்கிறீர்கள், போட்ட வழக்கில் என்ன சாதிக்கப் போகிறீர்கள் இதுகுறித்து அமைச்சர் தெளிவான பதிலை தர வேண்டும் என்றார்.

தொடர்ந்து பதில் அளித்த  அமைச்சர் விஜயபாஸ்கர், எதிர்கட்சிகளுக்கு அரசை பாராட்ட மனம் வருவதில்லை.

அதற்கு பதில் அளித்த  எதிர்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன்: ஆளும் அரசின் குறைகளை சூட்டிக்காட்டவே வந்துள்ளோம் தவிர பாராட்ட அல்ல!

இவ்வாறு காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றது.