ஸ்டாலின் பாஜகவுடனும் பேசி வருகிறார்….! தமிழிசை பரபரப்பு தகவல்

சென்னை:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜகவுடன் பேசி வருகிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் நடைபெற்று வந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இறுதிக்ககட்டத்தை எட்டியுள்ளது. வரும் 19ந்தேதியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்த 23ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் அல்லாது 3வது அணி அமைப்பது குறித்து ஒரு தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மம்தா, மாயாவதி, பினராயி விஜயன் உள்பட மாநிலக்கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வந்த நிலையில்,நேற்று திடீரென திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இருவரும் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தியது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தூத்துக்குடியில் இன்று  செய்தியாளர்களை சந்தித்த  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ராகுல்காந்தி, சந்திரசேகர ராவுடன் மட்டுமின்றி, மோடியுடனும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருவதாக பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார்.

ஒரு பக்கம் ராகுல், மறுபக்கம் சந்திரசேகர ராவ், மூன்றாவதாக மோடியுடனும் திமுக பேசிக் கொண்டிருக்கிறது என சிரித்தபடியே கூறிய தமிழிசை, நிறம் மாறி வருகிறார் மு.க.ஸ்டாலின் என விமர்சித்தார்.

மேலும்,  சந்திரசேகர ராவ்-திமுக தலைவர் சந்திப்பால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்றும், தாமரை தண்ணீரில்தான் இருக்கும் தாகமாக இருக்காது என மு.க.ஸ்டாலின் விமர்சனத் திற்கு பதிலளித்தார். முதலமைச்சராக வேண்டும் என டிடிவி தினகரன் ஆசைப்பட்டதால், 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்றும், இன்னும் அவர் ஆசைப்பட்டால் எத்தனை தொகுதிகளில் தேர்தல் வருமோ தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி