சென்னை: குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து திமுக தலைமையில் நடைபெறும் பிரமாண்ட பேரணிக்கு, பெரிய விளம்பரத்தை தேடிக்கொடுத்த அதிமுக அரசுக்கு நன்றி என்றுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து திமுக தலைமையில் பல்வேறு கட்சிகளும் ஒன்றுகூடி சென்னையில், டிசம்பர் 23ம் தேதி நடத்தவுள்ள பேரணிக்கு காவல்துறை திடீரென தடை விதித்தது. ஆனால், அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றது திமுக.

பேரணிக்கு சில நிபந்தனைகளுடன் அனுமதியளித்தது உயர்நீதிமன்றம். இந்நிலையில், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் திமுக தலைவர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இப்பேரணிக்கு சில நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் அனுமதியளித்ததே எங்களுக்கான பெரிய வெற்றி. பேரணியைத் தடுக்க அதிமுக அரசு எவ்வளவோ முயன்று பார்த்தது.

அப்படி முயன்றதன் மூலம், எங்களின் பேரணிக்கு பெரிய விளம்பரத்தைத் தேடித்தந்துள்ளது அதிமுக அரசு. அதற்காக நான் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீதிமன்ற நிபந்தனைகளின்படி அண்ணா வழியில் பேரணி நடைபெறும்” என்றார் ஸ்டாலின்.