நெக்ஸ்ட் தேர்வு: தமிழக சட்டமன்றத்தில் ஸ்டாலின் – விஜயபாஸ்கர் நேரடி விவாதம்

சென்னை:

மிழக சட்டமன்றத்தில்  இன்று மத்திய அரசு கொண்டு வர உள்ள நெக்ஸ்ட் எனப்படும் எக்சிட் தேர்வு தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் இடையே காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றன.

தமிழக சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  எம்பிபிஎஸ் நெக்ஸ்ட் தேர்வு தொடர்பாக  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.  அப்போது, ‘எம்.பி.பி.எஸ் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும். மருத்துவக் கல்லூரிகளை இயக்குவது மாநில அரசின் உரிமை, அதனை விட்டுத்தரக் கூடாது. மத்திய அரசின் தேசிய மருத்துவக் கழக மசோதாவை தமிழக அரசு எதிர்க்க வேண்டும்’ என வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய தமிழக, காதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘நெக்ஸ்ட் தேர்வு குறித்து தமிழக அரசின் கருத்தினை மத்திய அரசு கேட்டிருந்தது. அதற்கு தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட பதிலில்,  எம்பிபிஎஸ் நெக்ஸ்ட் தேர்வு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்ற எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாகவும்,  இந்த மசோதா, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி இருப்பதாகவும், தமிழகத்தின் உரிமையை பறிக்கும் செயல் என்பதால், இதனை ஏற்க முடியாது எனவும் கூறினார்.

மேலும் வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்து வரும் மாணவர்களுக்கு வேண்டுமானால் எக்சிட் தேர்வு நடத்தலாம் எனவும், பாராளுமன்றத்தில், அதிமுக எம்பிக்கள் இந்த மசோதாவுக்கு எதிராக குரல் கொடுப்பதுடன், எதிர்த்தும் வாக்களிப்பார்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.