சென்னை,

மிழக சட்டமன்ற பேரவையில் இருந்து  வெளியேற்றப்பட்ட  எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக  சட்டமன்ற உறுப்பினர்கள் அருகே உள்ள ராஜாஜி சாலையில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக சட்டசபையில், சசிகலா தரப்பினரால் அதிமுக எம்எல்ஏ சரவணன் விலை பேசப்பட்டது குறித்த வீடியோ வெளியானது குறித்து விவாதிக்க சபாநாயகர் மறுத்துவிட்டதை தொடர்ந்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் விற்பனை என்ற பதாதைகளுன் சபைக்குள் முழக்கமிட்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து, ஸ்டாலின் உள்பட திமுக சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.

திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றத்தை கண்டித்தது காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சபையை விட்டு வெளியேற்றப்பட்ட ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சியினர் சட்டமன்றம் எதிரே உள்ள ராஜாஜி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திமுக உறுப்பினர்களுடன் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு உறுப்பினர்களும் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அரசே ராஜினாமா செய் என கோஷம் எழுப்பினர்.

இதன் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட திமுக உள்பட கூட்டணி கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

மறியலில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள், மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி ஆகியோர், கைது செய்யப்பட்டு ராயபுரம் ஜெய் பேலஸ் திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்படுகின்ற னர்.