அண்ணா, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமனம் செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்

--

சென்னை,

மிழகத்தில் காலியாக உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக பொறுப்பு கவர்னருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு,  சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரை உடடினயாக நியமனம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இதுகுறித்து திமுக செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

‘அண்ணா பல்கலைக்கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தரான தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவ் தலைமையில் 19.5.2017 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்படுவதாக இருந்த பட்டமளிப்பு விழா தள்ளி வைக்கப்பட்டு இன்னும் படித்து முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெறாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள் நலன் கருதி தமிழக பொறுப்பு ஆளுநர் பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் அந்த விழாவில் பங்கேற்பதில் கருத்து வேறுபாடுகளுக்கு இடமிருக்க முடியாது என்றாலும், ‘தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் தரம் உலக பல்கலைக்கழகங்களின் தரத்திற்கு உயர்த்தப்படும்’ என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்த அதிமுக ஆட்சியில் இன்றைக்கு புகழ் பெற்ற அண்ணா பல்கலைக்கழகமும் மற்றும் சென்னை பல்கலைக்கழகமும் துணை வேந்தர்கள் இல்லாமல் இருப்பது மிகுந்த வேதனைக்குரியதாக இருக்கிறது.

தமிழகத்தில் தலைசிறந்த கல்விமான்களை உருவாக்கிய இந்த இரு பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் இவ்வளவு மோசமாக நிலைகுலைந்த பரிதாபம் அதிமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமிக்கப்படவில்லை.

27 வருடங்கள் துணை வேந்தராக பணியாற்றி, உலக அளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகமாக சென்னை பல்கலைக்கழகத்தை மாற்றிக் காட்டிய டாக்டர் லட்சுமணசுவாமி போன்ற பெருமை மிக்க துணைவேந்தர்களைக் கொண்ட சென்னை பல்கலைக்கழகத்தில் இப்போது துணைவேந்தரும் இல்லை. பதிவாளரும் இல்லை. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியும் இல்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக சென்னை பல்கலைக்கழகத்தில் பல்வேறு ஊழல் புகார்களுக்குள்ளாகி ஜனவரி 2016-ல் தன் பதவிக்காலத்தை நிறைவு செய்த துணைவேந்தர் தாண்டவனும், அண்ணா பல்கலைக்கழக நிதி விவகாரங்களில் உயர் கல்வித்துறை அமைச்சருக்கு துணை போனதாக புகார் கூறப்பட்டு மே 2016-ல் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்த துணை வேந்தர் டாக்டர் ராஜாராமனும் மீண்டும் அந்தந்தப் பல்கலைக்கழகங்களுக்கே துணை வேந்தர்களாக முயற்சி செய்கிறார்கள் என்று வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக மட்டுமின்றி, அதிமுக அரசுக்கும்- இந்த இரு துணைவேந்தர்களுக்கும் இருந்த ‘திரைமறைவு கூட்டணி’யை அம்பலப்படுத்தியிருக்கிறது.

இந்த இரு பல்கலைக்கழகங்களும் நிர்வாக ரீதியாக படு பாதாளத்திற்கு போகும் அளவிற்கு உயர் கல்வித்துறை நிர்வாகத்தை சீர் கெடுத்து விட்ட அதிமுக அரசு, இப்போது இந்த பல்கலைக்கழகங்க ளில் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டங்களுக்குக் கூட துணைவேந்தர் கையெழுத்துப் போட முடியாத நெருக்கடியை உருவாக்கி விட்டது.

துணை வேந்தர் கையெழுத்து இல்லாத பட்டங்களை இந்திய அளவில் புகழ் பெற்ற பல்கலைக்கழ கங்களோ, அல்லது வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழங்களோ ஏற்றுக் கொள்ளுமா என்ற மிகப்பெரிய கவலை மேல்படிப்பிற்கு செல்லும் மாணவர்களை மட்டுமல்ல- ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்ட வேலைக்குச் செல்லும் அனைத்து மாணவர்களையும் உலுக்கிக் கொண்டிருக்கிறது.

மன மகிழ்ச்சியுடன் பட்டமளிப்பு விழாக்களை கண்டுகளிக்க வேண்டிய பெற்றோர்களும் துணைவேந்தருக்குப் பதில் அதிகாரிகளே கையெழுத்துப் போட்டுக் கொடுக்கும் பட்டங்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதித்து விடுமோ என்ற அச்சத்தில் இருப்பதை உணர முடிகிறது.

அண்ணா பல்கலைக்கழக சென்னை சட்டம் 1978-ன் கீழ் துணைவேந்தர் பதவி தற்காலிகமாக காலியாக இருந்தால் அவரது அதிகாரங்களை செயல்படுத்த ஒரு நிர்வாக ஏற்பாட்டை சிண்டிகேட் செய்யலாம் என்று அனுமதியளிக்கிறது. அப்படியொரு நிர்வாக ஏற்பாட்டை சிண்டிகேட் செய்யும் வரை மூத்த பேராசிரியர் ஒருவரை துணை வேந்தரின் அதிகாரங்களை செயல்படுத்த அனுமதிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழக சட்ட திருத்தம் 2011-ன் கீழ் கூறப்பட்டுள்ளது.

இந்த ஏற்பாடு துணை வேந்தர் பதவி தற்காலிகமாக காலியாக இருந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் இப்போது இரு பல்கலைக்கழகங்களிலும் ஏற்பட்டுள்ள காலியிடம் தற்காலிகமானது அல்ல. துணைவேந்தர்கள் மூன்று வருடங்களுக்கு நியமிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு பதவிக்காலம் நீட்டிக்கப்படாது என்று கருதினால், அந்த மூன்று வருட பதவிக்காலம் நிறைவடையும் முன்பே, சர்ச் கமிட்டி அமைத்து துணை வேந்தர்களை தேர்வு செய்ய வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல பொறுப்பு.

இந்த இரு துணை வேந்தர்களும் தங்கள் பதவிகாலத்தை நிறைவு செய்த பிறகு ஒன்று முதல் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக அந்த துணை வேந்தர் பதவிகளை செயற்கையாக காலியிடமாக வைத்திருப்பதற்கு இந்த விதி பொருந்துவதற்கு வாய்ப்பில்லை.

இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் துணைவேந்தர் ராஜினாமா செய்து விட்டாலோ, திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு தன் பணியை செய்ய முடியாத நேரத்திலோ, அல்லது பதவியிலிருக்கும் துணைவேந்தர் இறந்து விடும் நேரத்திலோ அந்த பதவிக்குரிய கடமைகளையும், அதிகாரங்களையும் பயன்படுத்த பல்கலைக்கழக சட்டத்தில் செய்யப்பட்டுள்ள தற்காலிக நிர்வாக ஏற்பாட்டை அதிமுக அரசு நிரந்தரமாக பயன்படுத்த முயற்சிப்பதும்,

அந்த தற்காலிக நிர்வாக ஏற்பாட்டின் அடிப்படையில் மாணவர்களின் நிரந்தர எதிர்காலத்திற்கான பட்டமளிப்பு சான்றிதழ்களில் அதிகாரிகளை வைத்து கையெழுத்துப் போட வைப்பதும் சற்றும் பொருத்தம் இல்லாத நடவடிக்கை என்பது மட்டுமல்ல கடும் கண்டனத்திற்குரியது.

கூடுதல் பொறுப்பில் பல்வேறு துறைகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து அவர்கள் மூலம் தங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்வது, ஆலோசகர்களை நியமித்து அரசு நிர்வாகத்தை சீர்குலைப்பது, ஓய்வு பெற்றவர்களுக்கே பதவி நீட்டிப்பு கொடுத்து அந்த அரசு துறையில் உள்ளவர்களுக்கான பதவி உயர்வை தட்டிப் பறிப்பது எல்லாம் அதிமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளுக்கு கடந்த ஆறுவருடமாக கைவந்த கலையாக இருந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தற்போது பல்கலைக்கழக சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள தற்காலிக நிர்வாக ஏற்பாட்டை அதிகார துஷ்பிரயோகம் செய்வதற்காக அதிமுக அரசு நிரந்தர ஏற்பாடாக ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தி வருவது அரசு நிர்வாகத்தின் அங்கங்களை சிதைக்கும் செயல் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இது போன்ற அதிகார துஷ்பிரயோகங்களுக்கு மனமுவந்து துணை போகும் அதிகாரிகள் எதிர்காலத்தில் நிச்சயம் பதில் சொல்ல வேண்டியதிருக்கும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

ஆகவே சென்னை பல்கலைக்கழகத்திற்கும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் உடனடியாக துணை வேந்தர்களை நியமிக்க வேண்டும் எனவும், வேந்தர் பொறுப்பில் உள்ள தமிழக பொறுப்பு ஆளுநர் பல்கலைக்கழகத்தின் தலைவர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி தற்காலிக நிர்வாக ஏற்பாட்டை நிரந்தரமாக பயன்படுத்த அதிமுக அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பட்டமளிப்புச் சான்றிதழ்களில் அதிகாரிகளின் கையெழுத்தை போட்டு, மாணவர்களின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் எந்த நடவடிக்கையிலும் இந்த அதிமுக அரசு ஈடுபடக்கூடாது என்று தமிழக பொறுப்பு ஆளுநரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.