திமுக கூட்டணியில் இருந்து விசிக-வை கழற்றிவிட ஸ்டாலின் முயற்சி: எச்.ராஜா

சென்னை:

திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை கழற்றிவிட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முயற்சியை தொடங்கி உள்ளதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் பாஜக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜா கூறியதாவது,

தஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பு சார்பில் நடக்க இருந்த தியான நிகழ்ச்சிக்கு கோர்ட்டு தடை விதித்திருப்பது ஏற்புடையது அல்ல. இந்து மத கோவில்களில் பக்தர்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று சாடினார்.

மேலும்,  அரசியல் அமைப்பு வகுத்துள்ள சட்ட விதிமுறைகளின் படி நிர்வாகம் நடக்கிறதா?  என்று கேள்வி எழுப்பிய ராஜா,அதை கோர்ட்டு கண்காணிக்க வேண்டும் என்றார்.

அப்போது, அதிமுகவும் டிடிவி அணியையும் இணைக்க பாஜக பின்னணியில் இருந்து செயல்படுகிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதறகு பதில் அளித்த ராஜா, அந்த கருத்து தவறானது என்றவர், பா.ஜ.க. அதுபோன்று எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று கூறினார்.

தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் காலூன்றிய பின்புதான் ஜாதிய வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஆணவ படுகொலைகளும் அதிகரிக்க தொடங்கியது என்றவர்,  சமீப காலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஒருவிதமான பதட்டத்தை சமூகத்தில் ஏற்படுத்தி வருகிறார்… இது தவறானது…. சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு திருமாவளவன் நடந்து கொள்ள வேண்டும் என்றவர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை கூட்டணியில் இருந்து விடுவிப்பதற்கான முயற்சியை ஸ்டாலின் தொடங்கியுள்ளார். இது திருமாவளவனுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதால், அந்த பழியை பாஜகமீது சுமத்தி வருகிறார் என்றவர்,  வேண்டுமென்றே பா.ஜ.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயன்று வருகின்றனர் என்று கூறினார்.