சென்னை:

முதல்வர் கனவு காணும் ஸ்டாலின் நித்யானந்தா போல தீவு வாங்கி, அங்கு முதல்வராகலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் நக்கல் செய்துள்ளார்.

ராஜாஜியின் 141-வது பிறந்தநாளையொட்டி சென்னை பாரிமுனையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், ஜெயக்குமார், பெஞ்சமின் உள்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் அமைச்சர்  ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மத்தியஅரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த மசோதாவால் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது , அதனால்தான் அதிமுக இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்து என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர்,  உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மாற்றிமாற்றி பேசுகிறார் ஸ்டாலின்  என்று கூறியவர், “பகுத்தறிவு கொள்கையில் ஊறிய திமுக தலைவர் ஸ்டாலின், அறிவாலயத்தை விட்டு, ஃபைவ்ஸ்டார் உணவகத்தில் மீட்டிங் நடத்துகிறார் என்று விமர்சித்தார்.

உள்ளாட்சி தேர்தலை வரவேற்கிறோம் என சொல்லிவிட்டு, அதே சமயத்தில் நீதிமன்றத்திற்கு செல்வோம் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் இயற்றியிருக்கின்றனர். இதிலிருந்து திமுக மக்களை ஏமாற்றுவது தெரிகிறது. எப்படி இருந்த திமுக இப்படியாகிவிட்டதே? அக்கட்சி இப்படியாகிவிட்டது பெரிய கவலையாக இருக்கிறது என்று நக்கலடித்தார்.

மேலும், உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில்  இவ்வளவு குழப்பத்துக்கும் ஸ்டாலினின் முதல்வர் கனவுதான் காரணம் என்று குற்றம் சாட்டியவர்,  யாரெல்லாம் முதல்வராக வேண்டும் என நினைக்கிறார்களோ, அவர்கள் நித்யானந்தா போன்று ஈக்வெடார் மாதிரியான தீவை வாங்கி, அங்கு தன்னை முதல்வராக நியமித்துக்கொள்ளட்டும்,  அதில் எங்களுக்கு ஆட்சேபனையில்லை என்றார்.

ஸ்டாலினிடம் உள்ள பணத்தில் கண்டிப்பாக தீவு வாங்க முடியும், அதுபோல ஒரு தீவு வாங்கி, அவரால்  முதல்வராகி விடலாம் ஆனால், தமிழ்நாட்டில் முதல்வராவது நிச்சயமாக முடியாது. .

இவ்வாறு அவர் கூறினார்.