சென்னை:

திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில், இன்று அப்போலோ சென்ற திமுக தலைவர் முக ஸ்டாலின் அன்பழகன் உடல்நிலை குறித்து, அப்போலோ  மருத்துவர் களுடன் ஆலோசனை நடத்தினார்.

திமுக பொதுச்செயலாளராக இருந்து வரும் அன்பழகன் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நீண்ட கால நண்பர். தற்போது வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கட்சிப் பணிகளிலிருந்து ஒதுங்கியிருந்தார். கடந்த வாரம் உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை  அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று அன்பழகனை  சந்திப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அன்பழகனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இந்த ஆலோசனையின்போது,  திமுகவின் முக்கிய நிர்வாகிகள், அன்பழகன் குடும்பத்தினர் உள்ளிட்டோர் உடனிருந்ததாக கூறப்படுகிறது.