திருச்சி:

ஸ்டாலின் உச்சி குளிந்த பேச்சால் உணர்ச்சி வசப்பட்ட வைகோ, மேடையிலேயே தாரை தாரையாக  ஆனந்த கண்ணீர் விட்டார்… இது பார்வையாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில்   மதிமுக வழக்கறிஞர் வீரபாண்டியன் எழுதிய தமிழின் தொன்மையும் சீர்மையும் – கலைஞர் உரை என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது.  இந்த விழா வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட இரு கட்சி நிர்வாகிள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய,  மு.க.ஸ்டாலின், ‘கலைஞரால் போர் வாள் என்றழைக்கப்பட்டவர் வைகோ. தொண்டர்களால் தளபதி என்று அழைக்கப்பட்டவன் நான். தற்போது தளபதியும் போர்வாளும் ஒரே மேடையில் இணைந்திருப்பது திராவிட இயக்கத்தை காக்கவே. வயது முதிர்ந்த நிலையில் தலைவரைச் சந்தித்த போது, உங்களுக்கு இருந்தது போல் ஸ்டாலினுக்கும் துணையாக இருப்பேன் என்றார் வைகோ. வைகோவிற்கு நான் துணை நிற்பேன்.

கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டு நலனுக்காக ஸ்டெர்லைட், முல்லைப் பெரியாறு என பல போராட்டங்களை வைகோ முன்னின்று நடத்தி வருகிறார். அவர் போராட்டங்களுக்கு துணை நிற்போம். நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 பெற புயல்வேகப் பயணத்திற்கு வைகோ தயாராகி விட்டார். மத பயங்கரவாதத்தை முறியடிக்க தளபதிகளும் போர்வாள்களும் ஒன்று சேருவோம்”

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

வைகோவை புகழ்ந்து ஸ்டாலின் உணர்ச்சி வசப்பட்டு பேசும்போது, ஆகா… இதுவல்லவோ… ஆனந்தம் என்று மேடையில் அமர்ந்திருந்த  வைகோவின் கண்ணில் கண்ணீர் பெருக்கெடுத்து வடிந்தது.இதை கண்ட கட்சி தொண்டர்கள் உள்பட தொலைக்காட்சியில்  நிகழ்ச்சியை கண்டு கழித்தவர்களும் நெகிழ்ச்சி அடைந்தனர்.