ஸ்ரீரங்கம் போனால் சிஎம் ஆகிவிடலாம் என ஸ்டாலின் நினைக்கிறார்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை:

ஸ்ரீரங்கம் போனால் முதல்வர் ஆகிவிடலாம் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ஸ்ரீரங்கம் சென்ற ஸ்டாலினுக்கு ஸ்ரீரங்கம் கோவில் சார்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இது சர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்கள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர்,  கடவுள் பக்தி விவகாரத்தில் தி.மு.க.வின் கொள்கை என்ன என தெரியவில்லை என்று கூறினார்.

மேலும், ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றிருந்த குமாரசாமி கர்நாடக முதல்வர் ஆனதால், ஸ்டாலினும் முதலமைச்சர் ஆகிவிடலாம் என நினைக்கிறார் போலும் என்றவர்,  ஸ்ரீரங்கம் போனால் மட்டும் சிஎம் ஆக முடியாது. மக்கள் நினைத்தால்தான் சிஎம் ஆக முடியும் என்றும் கோயிலுக்கு செல்வது நல்ல விஷயம்தான். ஆனால் இரட்டை வேடம் போடக் கூடாது என்றும் கூறினார்.

திமுகவுடன் எங்களுக்கு கூட்டு கிடையாது. வாழ்நாள் முழுவதும் எங்களுடைய அரசியல் எதிரி திமுக. திமுக எதிர்ப்பு எங்களுடைய ரத்தத்தில் கலந்தது. அது எப்போதும் தொடரும் என்றார்.

ஸ்டாலின் ஸ்ரீரங்கம் விசிட் (பைல் படம்)

தொடர்ந்து பேசிய அமைச்சர்,  பட்டினப்பாக்கத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும், தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக மத்திய அமைச்சர் பொன்னார் கூறியதற்கு கண்டனமும் தெரிவித்தார்.

பொறுப்புள்ள மத்திய அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு, பொன்.ராதாகிருஷ்ணன் பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.