சென்னை: தமிழக தலைநகர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒன்றான வடசென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனை, இருதய கோளாறு நோய்களுக்கான ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையில் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. இந்த ஆண்டு 4வது முறையாக முதலிடத்தை தக்க வைத்துள்ளது. இதற்கு  மருத்துவமனை டீன் பாலாஜி  உள்பட மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஆஞ்சியோபிளாஸ்டி என்பது இதயத்திற்கு இரத்தத்தை விநியோகிக்கும் தமனிகள் அடைக்கப்பட்டிருப்பதைத் திறக்க பயன்படுத்தப்படும் ஒரு சிகிச்சை முறையாகும். இந்த தமனிகள் இதய இரத்தத் தமனிகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆஞ்சியோபிளாஸ்டி என்பது தமனி அடைக்கப்பட்டுள்ள இடத்தில் தமனியை விரிவுப்படுத்த உதவ ஒரு சிறிய பலூனை தற்காலிகமாக செருகி காற்றை அதற்குள் ஊதுவதாகும்.

அதுபோல, ஆஞ்சியோகிராம் என்பது  இதய தமனிகள் எனப்படும் உங்கள் இதயத்தின் இரத்த நாளங்களைப் பார்க்க எக்ஸ்ரே படங்களைப் பயன்படுத்தும் ஒரு நுட்பமாகும். இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை இருக்கிறதா என்பதைப் பார்க்க பரிசோதனை செய்யப்படுகிறது. இதயத்தின் நிலைமை களைக் கண்டறிய உதவும் இதய ஆஞ்சியோகிராம் என்பது இதய சிலாகையேற்றல் செயல்முறையின் மிகவும் பொதுவான வகையாகும்.

இதுபோன்ற இதயம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனை சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு,   கொரோனா காலகட்டத்தில் மட்டும் 1,602 பேருக்கு ‘ஆஞ்சியோகிராம்’ மற்றும் ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சைகள் செய்யப்பட்டு இருப்பதாகவும்,  இதன் காரணமாக தமிழகத்தில் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையில் தொடர்ந்து 4-வது ஆண்டாக தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளது.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இதுவரை 32 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு, அதில் 98 சதவீதம் பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

இதய கோளாறு ஏற்பட்டவர்களுக்கு, அதற்கான சிகிச்சை அளிக்க தனி இதய சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பினர்.

அந்த வகையில் இதயத்தில் கோளாறு ஏற்பட்ட 3 ஆயிரத்து 2 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 300 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு, அதற்கான சிகிச்சையுடன் கொரோனா சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.

70 நோயாளிகளுக்கு முன்பே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பின்னர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதால் அதன் சிகிச்சையும் சேர்த்து செய்த பின் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாகவும்  மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் பாலாஜி  தெரிவித்துள்ளார்.

ஸ்டான்லி மருத்துவமனையில் இதுவரை 5 ஆயிரத்து 43 பேருக்கு ‘ஆஞ்சியோகிராம்’ மற்றும் ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

16.02.2021 அன்று 5000வது ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நோயாளிகள் அனைவருக்கும் கோவீட் 19 மாதிரி பரிசோதனை செய்யப்பட்டு ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது.

இந்த 1ஆண்டு பிப்ரவரி 2020 முதல் 2021 வரை கொரோனா காலத்தில் 1602 நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி பரிசோதனை ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.