ஸ்டார் ஹோட்டல்.. ஏசி பஸ்! : சசி நடராஜன் தீவிர கண்காணிப்பில் அதிமுக எம்எல்ஏக்கள்…

சென்னை,

மிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று இரவு ஜெ.சமாதியில் திடீர் தியானம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து அதிமுக  சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்வர் பதவி ஏற்க தயாராக இருக்கும் சசிகலா குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை செய்தியாளர்களிடம் விவரித்தார்.

தன்னை சசிகலா தரப்பினர்  கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியில் இருந்து விலக நிர்ப்பந்தித்தாக குற்றம்சாட்டினார்.

அதையடுத்து சசிகலா ஓபிஎஸ்-ஐ கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார். மேலும் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

பரபரப்பான இந்த சூழ்நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஓபிஎஸ்-சுக்கு ஆதரவாக சென்றுவிடுவார்கள்  என எண்ணிய சசிகலா தரப்பினர் அவர்களை அனைவரையும் ஸ்டார் ஓட்டலில் சிறை வைத்துள்ளனர்.

அதிமுக எம்எல்ஏக்கள்  134 பேரு சசிகலாவுக்கு  ஆதரவாகவே உள்ளனர் என்று தம்பித்துரை கூறினார்.

இதைத்தொடர்ந்து இன்று காலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சசிகலா தலைமையில் அதிமுக தலைமை நிலையத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து வந்தனர். நட்சத்திர ஓட்டல்களில் சிறை வைக்கப்பட்டிருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சொகுசு பஸ்சில் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.

அங்கு அவர்களுக்கு காலை சிற்றுண்டியும், மதிய உணவும் வழங்கப்பட்டது. யாரும் வெளியேறிவிடாதவாறு அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் முடிந்ததும், மீண்டும் பேருந்து மூலம் சேமியர்ஸ் சாலையில் உள்ள ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

சசிகலா முதல்வராக பதவி ஏற்பது தள்ளிபோகும் நிலையில்,  அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளி மாநிலங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்ல சசிகலா தரப்பு முடிவு செய்துள்ளதாக தவல்கள் உலா வருகின்றன.

அதற்கேற்றவாறு, 3 நாட்களுக்கு தேவையான உடைகள், மருந்து மாத்திரைகளை தயார் செய்யச்சொல்லி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் சொல்கின்றன.

அவர்கள் தங்குவதற்கும், தேவையானவற்றை செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆளுநர் முடிவு அறிவிக்கும்வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சசிகலா தரப்பினர் கண்காணிப்பில் சுற்றுலாவில் இருப்பார்கள் என தெரிகிறது.

ஒவ்வொரு உறுப்பினர்களின் செல்போன் முதல் அவர்களின் நடவடிக்கைகள் அனைத்துமே கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே எம்ஜிஆர் மரணத்திற்கு பிறகு, அதிமுக இரண்டாக உடைந்தபோது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி