மியான்மரில் இருந்த தப்பி வந்து வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகள் பாதிப்புக்கு ஆளாகும் சூழல் உருவாகி வருவதாக ஐ.நா. கவலை தெரிவித்து உள்ளது.

தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் பவுத்த மதத்தை சேர்ந்தவர்களே பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். அங்கு சிறுபான்மையினராக வாழ்ந்து வரும் ரோஹிங்கியா இஸ்லாமியர்களை பர்மிய பவுத்தர்கள் மற்றும் அரசு படைகள் தொடர்ந்து தாக்கி வருகிறது. இதன் காரணமாக அவர்கள் வெளிநாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

மியான்மரில் ராணுவத் தாக்குதலில் இருந்து தப்பிவரும் அகதிகள், வங்கதேச எல்லையான காக்ஸ் பஜார் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா ஆண்களுக்கு கட்டாய குடும்பக்கட்டுப்பாடு செய்ய பங்களாதேஷ் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது அங்கு பருவமழை தொடங்கி பெய்துவருகிறது. இதன் காரணமாக அவர்கள் தங்கும் இடங்கள் சேரும் சகதியுமாக உள்ளது.

இதன் காரணமாக வங்க தேசத்தில் தங்கி உள்ள சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்படும் சூழல் இருப்பதாகவும்,  காக்ஸ் பஜார் பகுதியில் தங்கியுள்ள சுமார் 2 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐ.நா. கவலை தெரிவித்து உள்ளது.