விளையாட்டு மைதானங்களை திறப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசு வெளியீடு

சென்னை: விளையாட்டு மைதானங்களை திறப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, விளையாட்டு மைதானங்களுக்குள் ஆரம்ப கட்டத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

மைதான நுழைவாயிலில் கைகளை கழுவ சானிடைசர் திரவமானது துப்புரவு பணியாளர் மூலம் வழங்கப்பட வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.

மாஸ்க் அணிவது கட்டாயம் என்பதோடு, மைதானத்திற்குள் அனைத்து நேரங்களிலும் அதை அணிய வேண்டும். மைதானத்திற்கு உள்ளே, வெளியே  உமிழ்வது தடைசெய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பராமரிக்கும் பொருட்டு, ஆரம்பத்தில் 100 உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள்.

கட்டுப்பாட்டு மண்டலத்திலிருந்து யாருக்கும் மைதானத்திற்குள் நுழைய அனுமதி இல்லை. தண்ணீர் பாட்டிலை அவர்களே எடுத்துச் செல்ல வேண்டும். மைதான கழிவறைகளை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

சமூக இடைவெளியை கண்காணிக்க பராமரிப்பு ஊழியர்கள் ஈடுபடலாம்.  கழிவுகளை அதற்கென விளையாட்டு மைதானத்தில் வழங்கப்பட்ட தொட்டிகளில் அப்புறப்படுத்த வேண்டும். பின்னர் அந்த கழிவுகளை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் பாதுகாப்பாக வெளியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

மைதானத்தில் தின்பண்டங்கள், துரித உணவு போன்றவை விற்பனை செய்யக்கூடாது. பராமரிப்பு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் முகமூடிகள், கையுறைகள் மற்றும் காலணிகள் போன்ற பாதுகாப்பு கருவிகளை அணிய வேண்டும்.

மைதானத்தில் காலை, மாலை நேரங்களில் உடல் தகுதி மற்றும் உடற்பயிற்சி செய்யும் போது அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மைதானத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.