கன்னியாகுமரி,

கி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில், புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வரும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், காணாமல் போன மீனவர்களை தேடுவதில் மெத்தனம் காட்டி வருவதாக குற்றம்சாட்டி உள்ளார்.

கடந்த 29-ம் தேதி, ஓகி புயல் காரணமாக கன்னியாகுமாரி மாவட்டம் கடுமையான சேதத்துக்கு உள்ளானது. அந்த பகுதியில் இருந்து ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றவர்கள் கரை திரும்ப முடியாமல், என்ன ஆனார்கள் என்று இதுவரை தெரியவில்லை.

காணாமல் போன மீனவர்களை மத்திய, மாநில அரசுகள் தேடுவதில் அதிக கவனம் செலுத்த வில்லை என கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் இன்று  கன்னியாகுமரி மாவட்டத்தில் புயலால்  பாதிக்கப்பட்ட நீரோடி, சின்னத்துறை மணக்குடி உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களுக்கு சென்று பார்வையிட்டார். அங்கு பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

அதைத்தொடர்ந்து மணக்குடி பகுதியில் செய்தியார்களுடன் பேசிய அவர்,  கடந்த 100 ஆண்டு களில் குமரி மாவட்டத்தில் இல்லாத புயல் வெள்ள பாதிப்பு தற்போது நிகழ்ந்துள்ளது.

ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஆயிரக்கணக்கான இந்த பகுதி மீனவர்கள் இன்னும் வீடு திரும்பாமல் உள்ளனர்.  அவர்களை தேடி கண்டுபிடிப்பதில் மத்திய மாநில அரசுகள் மெத்தனம் காட்டி வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்கிறது.

காணாமல் போன மீனவர்களை கண்டு பிடிக்க போர்க்கால அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.  மத்திய மாநில அரசுகள் மெத்தனமாக செயல்பட்டு வருகிறது.   2 அல்லது 3 ஹெலிகாப்டர்களை மட்டும் வைத்து மீனவர்களை தேடி வருகிறார்கள். இப்படி தேடினால் அவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

உடனே கப்பல் படை மற்றும் கடலோர காவல் படை உதவியுடன்  காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் வருமானத்தை கொண்டு அவர்கள் குடும்பம் வாழ்கிறது.மனித உயிர் மிகவும் முக்கியமானது என்றார்.

மேலும், இந்த புயலின் காரணமாக  இயற்க்கை எய்திய மீனவர் குடும்பங்களுக்கு கேரள மாநில அரசு வழங்குவது போன்று 15 லட்சம் ரூபாயை தமிழக அரசும் வழங்க வேண்டும் இதில் கேரளா தமிழ்நாடு என வித்தியாசம் பார்க்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.