டில்லி

பாரத ஸ்டேட் வங்கி தனது வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை மீண்டும் குறைத்துள்ளது.

இந்தியாவில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அமெரிக்க  டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.72 ஆக குறைந்துள்ளது. உலகெங்கும் இப்போது பொருளாதார வளர்ச்சி குறைவு இருந்தாலும் இந்தியாவில் அது அதிக அளவில் உள்ளது. அதையொட்டி பணப்புழக்கத்தை அதிகரிக்க இந்திய அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. நேற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்துப் பல அறிவிப்புக்களை அறிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தை ஏற்கனவே குறைத்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது வைப்பு நிதிக்கு வங்கி அளித்து வரும் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது. இந்த வட்டிக் குறைப்பு இந்த மாதம் 26 அதாவது வரும் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வர உள்ளன. மிகக் குறைந்த காலத்துக்கான வட்டி 5%லிருந்து 4.5% ஆகவும் மிக அதிக காலத்துக்கான வட்டியான 6.5% தற்போது 6.25%  ஆகவும் குறைக்கப்பட்டுள்ஹ்டு.

வயது மூத்தோரின் வைப்பு நிதிக்கான வட்டியும் குறைக்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில் குறைந்தபட்ச காலத்துக்கனா வட்டியான 5.5% வட்டி 5% ஆகவும் அதிகபட்ச காலத்துக்கான வட்டியான 7% வட்டி 6.75% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு தற்போது வங்கி தான் வழக்கும் கடனுக்கு வட்டியைக் குறைக்க உள்ளதே காரணம் என நிர்வாகம்  தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் சேமிப்பு வங்கிக் கணக்குக்கான வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை.