காஷ்மீரில் நிலம் வாங்க கட்டுப்பாடுகள் – மாநில பா.ஜ.க. கோரிக்கை

ஸ்ரீநகர்: காஷ்மீரின் சிறப்பு அதிகாரங்கள் ரத்துசெய்யப்பட்ட நிலையில், அங்கே யார் வேண்டுமானாலும் எவ்வளவு நிலம் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என்ற விஷயத்தில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமென அம்மாநில பாரதீய ஜனதா கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த விஷயத்தில், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பின்பற்றப்பட்டுவரும் சிறப்பு நடைமுறைகளைப்போல், காஷ்மீரிலும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; இமாச்சல் பிரதேசத்தில் வெளியாட்கள் யாரும் அம்மாநில அரசின் அனுமதியில்லாமல் விவசாய நிலம் வாங்க முடியாது. அதேபோன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் வெளிமாநிலத்தவர் யாரும் 250 சதுரமீட்டருக்கு மேல் நிலம் வாங்க முடியாது. இதேபோன்றதொரு கட்டுப்பாடுகள் வடகிழக்கு மாநிலங்களிலும் உண்டு.

எனவே, காஷ்மீரிலும் இத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. நிலம் வாங்கும் விஷயத்தில் அங்கே அதிககாலம் தங்கியுள்ளவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

அப்போதுதான் மாநிலத்தின் சூழலுக்கு உகந்ததாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மாநில பாரதீய ஜனதா தரப்பிலிருந்து மத்திய தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறுகிறார்கள்.